2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம்’ என்பதால் விவேகமே உசிதமாகும்

Editorial   / 2021 மார்ச் 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உயிர்களுக்கு மதிப்பில்லாமல் போகும் நிலைமையே காணப்படுகின்றது என்பது, ஒவ்வொரு நாளும் இடம்பெறுகின்ற வீதி விபத்துகளின் ஊடாக அவதானிக்க முடிகின்றது. 24 மணிநேரத்துக்குள் ஆகக் குறைந்தது 10 உயிர்களை வீதி விபத்துகள் காவுகொண்டுவிடுகின்றன.

அதற்கு அப்பால், அவதானமின்மையால் ஏற்படுகின்ற உயிரிழப்புகளும் அதிகரித்துகொண்டே செல்கின்றன. வீதி விபத்துகளில் பாதசாரிகளும் உயிரிழந்து விடுகின்றனர். பிரதான வீதிக்கு நடந்தேவந்து நடந்தே திரும்பிச் சென்றுகொண்டிருக்கும் அப்பாவிகளின் உயிர்களுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமையொன்றே ஏற்படுகின்றது.

வீட்டிலிருந்த மீன்தொட்டிக்குள் ஒன்றரை வயதான குழந்தையொன்று விழுந்து மரணித்தமை அவதானமின்மையால் ஏற்பட்ட விபரீதமாகும். இவ்வாறான பல விபரீதங்கள், நாடளாவிய ரீதியில் அவ்வப்போது இடம்பெற்றுள்ளன. ஆகையால், குழந்தைகள், சிறுவர்கள் இருக்கும் வீடுகளில் இருப்போர், அவர்களின் நடமாட்டங்கள் தொடர்பில் அவதானமாகவே இருக்கவேண்டும்.

அதேபோல, வீடுகளிலிருக்கும் மின்ஆழிகள் தொடர்பில் மிகக் கவனமாய் இருத்தல் அவசியமாகும். இல்லையேல், சிறுவிரல்களைக் கொண்டு துழாவும் போது, மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகி மரணித்த சம்பவங்களும் கடந்தகாலங்களில் இடம்பெறாமல் இல்லை.

விவேகம் இல்லாத வேகத்தால், வீதி விபத்துகள் இடம்பெறுவதே பலரினதும் அவதானிப்பாகும். அதற்கப்பால், மதுவை அருந்திவிட்டு வாகனங்களைச் செலுத்துதல், நித்திரைக் கலக்கத்தில் வாகனத்தைச் செலுத்துதல், வீதி குறியீடுகளை அவதானிக்காமை உள்ளிட்டவை பிரதான காரணிகளாக அமைந்திருக்கின்றன.

இவற்றிலெல்லாம் பெரும்பாலும் சிறியரக வாகனங்களே சிக்கிக்கொள்கின்றன. சாதாரணமாக ஒவ்வொரு வாகனத்தை எந்தளவு வேகத்தில் செலுத்தவேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்தைத் தாண்டினால், அந்த வாகனமே எச்சரிக்கை விடுக்கும், எச்சரிக்கையையும் மீறிப் பயணிக்கும் போதுதான் கோரமான விபத்துகள் இடம்பெறுகின்றன.

முந்திச் செல்லும் போதும் கவனமாக இருந்தால், வேண்டாத விபரீதங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம். வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிரான அபராதங்களும் தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டாலும் வீதிவிபத்துகளுக்குக் குறைவே இல்லை. ஆகையால், சாரதிகளுக்குத் தெளிவூட்டும் செயற்பாடுகளைப் போக்குவரத்துப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

சிறுசிறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக மன்னிப்பளிக்கும் போது, ஒவ்வொரு குற்றங்களையும் சிறு குற்றங்களாக எண்ணிக்கொள்ளும் அவ்வாறான சாரதிகள், பாரிய குற்றங்களுக்குள் சிக்கிக்கொள்கின்றனர். ஆதலால், சிறிய குற்றம், பெரிய குற்றமென வகைப்படுத்தாமல், குற்றம் குற்றம்தான், என்ற அப்படையில் குற்றத்துக்கான அபராதங்களை அறவிடும்போதும் ஓரளவுக்கு சாரதிகள் திருந்திக்கொள்வர்.

சொந்தவாகனம் அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் இருக்குத்தானே என்ற நினைப்பில், காலாந்தாழ்த்திப் புறப்பட்டு, வேகமாகப் பயணிப்பதை விடவும் நேரகாலத்துடன் புறப்பட்டு, மிதமாகன வேகத்தில் பயணித்தால், அநாவசியமான முறையில் பாரிய வீதி விபத்துகளும் ஏற்படாது, உயிரிழப்புகளும் ஏற்படாது. ஆகையால், சாரதிகளே, வேகமாக அல்ல; விவேகமாகச் சிந்திப்பதே உசிதமானதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .