2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உங்களை ‘ஒதுக்கிவைக்கவில்லை’

Editorial   / 2020 நவம்பர் 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள்தான் பாதுகாப்பாய் இருக்கிறீர்கள்; உங்களை ‘ஒதுக்கிவைக்கவில்லை’


புரிதலின் முக்கியத்துவம் பலருக்கும் புரியாமல் இருப்பதே, பிரச்சினைகளின் மூலகாரணங்களாக இருக்கின்றன. புரிதல் இன்மை, ‘தனிமைப்படுத்தல்’ செயற்பாடுகளிலும் இருக்கத்தான் செய்கின்றன. சட்டம் சரியாக அமுல்படுத்தப்படுமாயின், ‘தனிமைப்படுத்தல் ஊரடங்கு’ சட்டம் அமுலில் இருக்கும்போது, வெளியில் எவருமே தலைக்காட்ட முடியாது.

கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நாயொன்று, வீட்டுக்குள்ளேயே இருக்கும் மனிதர்களைப் பார்த்து, “ஒருசில நாள்களுக்கே இப்படியென்றால், வாழ்நாள் முழுவதும் அடைத்து வைத்திருக்கிறீர்களே; எங்களுக்கு எப்படியிருக்கும்” எனக் கேட்பதைப் ​போன்ற​தொரு ‘மீம்ஸ்’ பரவியிருக்கிறது. அப்படியான நிலைமைதான் ஏற்பட்டிருக்கும். ​கொரோனாவின் முதலாவது அலையில் அவை கற்றுக்கொண்டவை.

சுதந்திரப் பறவைகளாய் சுற்றித்திரிய வேண்டிய காலத்தில், நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கி​டப்பதென்பது ஒவ்வொரினதும் மனநிலைக்கேற்ப மாறுபடும். ஆனால், கொரோனா ​வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலையின் போது, நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் ‘தனிமைப்படுதல் உண்மையில், அச்சட்டத்தில் உள்ளவாறே கடைப்பிடிக்கப்படவில்லை.

சுமார் 10 நாள்களுக்குப் பின்னர், ​மேல்மாகாணத்தில் குறித்தொதுக்கப்பட்ட 25 பிரிவுகளைத் தவிர, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்படுகின்றது. இனித்தான், ஒவ்வொருவரும் மிகமிகக் கவனமாகவும் அவதானமாகவும் இருக்கவேண்டும்.

“நாட்டை முழுமையாக மூடிவைத்திருக்க முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அண்மையில் அறிவித்திருந்தார். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் நடந்துகொண்டோமெனில், எந்தவொரு வைரஸூம் எம்மில் தொற்றிக்கொள்ளாது.

1897ஆம் ஆண்டு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய்த் தொடர்பான சட்டம் திருத்தப்பட்டு, கட்டளைச்சட்டத்தின் பிரிவுகளின் கீழான ஒழுங்குவிதிகளே, தற்போது அமுல்படுத்தப்படுகின்றன. அது, உங்களை அந்நியப்படுத்தவோ, ஒதுக்கிவைக்கவோ இல்லை. மாறாக, தொற்றிக்கொள்ளாமல் இருப்பதற்காகவே, இவ்வாறான நடைமுறைகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

‘தனிமைப்படுத்தல்’ அமுல்படுத்தப்பட்டால். அப்பிரதேசத்துக்குள் யாரும் நுழையவோ, அங்கிருந்து வெளியேறவோ முடியாது. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில், நம்பிக்கையின் பிரகாரம், நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சுதந்திரத்தையும் தவிடுபொடியாக்கிவிடக் கூடாது.

தேசிய பாதுகாப்பு, அத்தியாவசிய தேவைகளை வழங்கும் நிறுவனங்கள், வேலைத்தளம், பல்பொருள் அங்கா​டி, கடை, விற்பனை நிலையங்கள் ஆகியவை முறையாக இயங்குவதற்கு, அதிகாரிகளால் அனுமதியளிக்க முடியும். அத​ற்கு அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி ஒப்புதலளிக்கவும் ​வேண்டும். ஆட்களின் எண்ணிக்கையை விஞ்சாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

மேல்மாகாணம் திறந்துவிடப்பட்டுவிட்டது என, நினைத்துக்கொண்டு கவனயீனமாக நடந்துகொண்டு, மீண்டும் மூடிவிடுவதற்கு இடமளித்துவிடக்கூடாது. அல்லது, சட்டத்தை இறுக்குவதற்கு வழிசமைத்துவிடக்கூடாது. இவையெல்லாம், எங்களுடைய கைகளிலேயே இருக்கின்றன.

ஒருவேளையல்ல, இரண்டு வேளைகளாவது வாயையும் வயிற்றையும் கட்டிக்கொண்டு வாழ்ந்துவிட்டால், குடும்பத்துடன் வீட்டுக்குள் வாழலாம்; இன்றேல் தனிமைப்படுத்தல் நிலையங்களே தஞ்சமென்று நிற்கவேண்டும் என்பதை, நினைவில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .