2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எத்தனை நாள்களுக்கு ’ஏமாளிகளாய்’ வாழ்வீர்கள்

Editorial   / 2020 நவம்பர் 08 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் எத்தனை நாள்களுக்கு ’ஏமாளிகளாய்’ வாழ்வீர்கள்

ஆயிரமாயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் பிரதான பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அரசாங்கத்தை நெருடிக்கொண்டிருந்த 20ஆவது பிரச்சினைக்குத் தீர்வுகண்டாயிற்று. ஆனால், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குக் கூட, தீர்வொன்றை வழங்குவதற்கு முன்வராமல் அரசாங்கம் திமிறிக்கொண்டிருக்கின்றது.

புதிய ஜனாதிபதியின் கீழ், நல்லதொரு பயணம் ஆரம்பிக்கப்பட்டாலும் அப்பயணத்துக்கு இடையூறுவிளைவிக்கும் வகையில், கொவிட்-19 குறுக்கிட்டு நின்றுவிட்டது. இது, நமது நாடு மட்டுமே முகங்கொடுத்திருக்கும் பிரத்தியேக பிரச்சினையாயின், உலகநாடுகள் கைநீட்டிக் கரைசேர்த்திருக்கும். ஆனால், உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதால், தற்பாதுகாப்புக்குள் விடப்பட்டுவிட்டது.

தனித்துவிட்டுவிடாது, உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் நிதியுதவிகளை வாரி வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு, ஒக்டோபர் மாதத்தில் மட்டும் 7.3 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக, கொவிட்-19 நிதியம் அறிவித்துள்ளது.

அனர்த்தங்கள் ஏற்படும் போதெல்லாம், நிவாரணங்களைக் கொடுத்து, மக்களின் வாழ்க்கையை வழமைக்குத் திரும்பச்செய்வது, எந்தவோர் அரசாங்கத்தினதும் தலையாய பொறுப்பாகும். அந்தக் கடப்பாட்டிலிருந்து ஒருதுளியேனும் விலகமுடியாது. இயற்கை அனர்த்தங்களும், அவ்வப்போது அரசாங்கத்தைத் தட்டிப்பார்த்துவிட்டுச் செல்லுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், சாதாரண பொதுமக்களின் வாழ்க்கையே இருண்டுகொண்டுதான் செல்கின்றது. ஆனால், பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை, இன்னும் குப்பி இலாம்புக்குள்ளேயே, அரைவெளிச்சத்தில் இருக்கின்றது. பெருந்தோட்டங்களிலிருந்து கல்விகற்றவர்கள், சமூக அந்தஸ்துக் கிடைத்தவுடன் அங்கிருந்து வெளிக்கிளம்பி விடுகின்றனர். அது தவிர்க்கமுடியாது.

ஆனால், நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்குத் தங்களுடைய இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, நீர்வார்த்துக்கொண்டிருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முறையான திட்டங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை.

முதலாளித்துவத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு இடையில், அரசியல் நுழைந்துகொண்டு ஆட்டிப்படைக்கிறது. அதனால்தான் என்னவோ, ஆயிரமாயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தச் சம்பள அதிகரிப்பான 1,000 ரூபாய் பேச்சு, முடக்கப்பட்டுவிட்டது.

மேடை நாடகங்களில் வரும் கோமாளிகளைப் போல, 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்புப் பேச்சு, அவ்வப்போது காற்றோடு காற்றாக அடிபட்டுச் சென்றுவிடும். இக்காலத்தில், கொரோனா வைரஸின் தாக்கம், ஆயிரம் பிரச்சினைகளையும் மிகவேகமாக இழுத்துச் சென்றுவிட்டது.

மலையக மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள், காட்டிக்கொடுக்கப்பட்ட வரலாறுகள் கசப்பானவை. இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் கையேந்தி ஏமாளிகளாகவே இருக்கப்போகின்றார்கள்? ஏமாந்து இருப்பதால்தான், ஏமாற்றுபவர்கள் அவர்களுடைய தலைமேலேறி குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

தளிர்களைக் கொய்துகொண்டிருப்பதால், மாற்று வழியில்லையென எவருமே சிந்தித்துவிடக்கூடாது. அதேபோல, பெருந்தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் 'சின்னக் கூலிகள்' என அழைப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தீர்மானம் எடுப்பதற்காக, அடுத்த தலைமுறை வரையிலும் காத்திருக்காமல், உடனடியாகச் சிந்தித்தால் மட்டுமே, 1,000 ரூபாய்க்காகக் கையேந்தும் நிலைமை மாறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .