2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

க​தவைத் தட்டினால் தாழ்பாள்கள் என்ன செய்யும்?

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

க​தவைத் தட்டினால் தாழ்பாள்கள் என்ன செய்யும்?

தாழ்ப்பாளைத் திறக்காவிடின், யாராவது முகஞ்சுளித்துக்கொண்டு, கோபித்துகொள்வார்களோ; வாழ்நாள் எதிரியாகிவிடுவார்களோ; உறவு அறுந்துவிடுமோ என்றெல்லாம், இரண்டாவது முறையும் சிந்திப்பதற்கு இனியும் நேரமில்லை என்பதை, எல்லோரும் நினைவில் வைத்துக்கொள்வோம்.

யாருடனும் கதைக்காமல், தனிவழியில் செல்வதற்கு வாழ்க்கையில் பலமுறை பாடங்களைக் கற்றிருப்பீர்கள்; கற்றும் தந்திருப்பார்கள். அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணியிருக்கவே மாட்டீர்கள், இதுவும் கடந்துபோகுமென நினைத்து, பழையதை மறந்திருப்பீர்கள்.

ஆனால், கொரோனா வைரஸ் காலத்தில் கற்றுத்தந்திருப்பது உங்களுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாத பாடமாகவே இருக்கும். அந்நாள்களில் கற்றுக்கொண்டவை, ஏனையோர் கற்பித்தவை எல்லாவற்றையும் இனியொரு பாடமாகவே பலரும் கொள்வர்.

தாயொருவர் கதவோரத்தில் நின்றுகொண்டு கண்ணீர்மல்க, தனது ஆறுமாதங்களேயான சிசுவை, பொது சுகாதார பரிசோதகர் இன்றேல் கிருமி தொற்றொழிப்பாளர், கைகளால் அணைத்து ஏந்திச்செல்லும் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது. இது, பெற்றமனதை எவ்வளவுக்கு வாட்டிவதைத்திருக்கும். என்பதை வர்ணிப்பதற்கு வார்தைகளே இல்லை.

எம்மையெல்லாம் வாயடைக்க வைத்திருக்கும் அந்தப் புகைப்படத்திலிருக்கும் ஆறுமாத சிசுவுக்கு, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது. பால்குடி மறவாத பிஞ்சை தாயிடமிருந்து அபகரித்துச் செல்லுமளவுக்கு கொரோனா கொந்தளிக்கிறது.

இவற்றுக்கெல்லாம், நாம்தான் முழுக்காரணம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். வீடுகளிலிருக்கும் ​சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியமைக்கு, கொரோனா காரணமல்ல. வெளியில் சென்று கொரோனாவை வீட்டுக்குள் அழைத்துவந்து நாங்கள்தான் குந்தச் செய்திருக்கின்றோம்.

கொரோனா வைஸின் வீரியத்தைக் கண்டு பலரும் கதிகலங்கி நின்கின்றனர். இன்னுமே சிலர் ஏளனமாய்ப் பார்த்துகொண்டுதான் இருக்கின்றனர். சுகாதார வழிமுறைகளை அச்சொட்டாகக் கடைப்பிடிப்பதில் அலட்சியப் போக்கையே காண்பிக்கின்றனர்.

இலங்கையில், மூவினங்களைச் ​சேர்ந்தவர்களும் வீடுகளுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்று விருந்துபசாரம் வழங்குவதில் கைதேர்ந்தவர்கள். ஆனால், விருந்தினர்களை மட்டுமல்ல, அக்கம்பக்கத்தார், உறவினர்களைக்கூட, தங்களுடைய வீடுகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் பலரும் உறுதியாய் இருக்கின்றனர்.

“இது​ என்ன கல்நெஞ்சக் குடும்பம்” எனச் சொன்னாலும் பரவாயில்லை. கொரோனா வைரஸைக் கூட்டிக்கொண்டு வந்துவிடக்கூடாது என்பதில் பலரும் விழித்துக்கொண்டுள்ளனர். வைரஸிலிருந்து தங்களைப் பாதுகாக்க, சுகாதா​ர வழிமுறைகளை பின்பற்றுதல் ஒவ்வொருவரினதும் தலையாய பொறுப்பாகவே உள்ளது.

வீடுகளுக்குள் இருக்கும் சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கிறது என்றால், கொரோனாவுடன் யாரோ வீட்டுக்குள் வந்து சென்றுள்ளனர். இல்லையேல், குடும்பத்தினர் யாரோ ஒருவர், வெளியில் சென்று கொரோனாவைக் கூட்டுக்கொண்டு வந்திருக்கின்றார்.

ஆகையால், கொரோனா உருவத்தில், வீட்டுக்கதவுகள் தட்டப்படுகின்றன. அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டுமாயின் தாழ்ப்பாளை இறுக்குவதே ஒரேவழி. அதனூடாகவே கொரோனா வைரஸைத் தடுக்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X