2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குகையின் வாசலில் ’சிலந்திவலை’ பின்னப்படுவது யாருக்கு?

Editorial   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

குகையின் வாசலில் ’சிலந்திவலை’ பின்னப்படுவது யாருக்கு?

எதிரிகள் சுற்றிவளைத்தபோது, கற்குகை ஒன்றுக்குள் ஒளிந்துகொண்ட ஒருவனின் வேண்டு​தலின் பிரகாரம், குகையின் வாசல், சிலந்திகளால் வலை பின்னப்பட்டது. அங்குவந்த எதிரிகள், சிலந்திவலையைப் பார்த்துவிட்டு, சற்றுமுன்னர் குகைக்குள் யாரும் நுழைந்திருக்க வாய்ப்பில்லை என நினைத்து, திரும்பிச் சென்றுவிட்டனர். ​அதனால், ஒளிந்திருந்தவர் தப்பித்துக்கொண்டார். இது ஒரு ஐதீகக் கதையாகும்.

இந்தக் கதைக்கும் சட்டத்துக்கும் இடையில், ஒருவகையான தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது. ஆட்சிகள் மாறினாலும் சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து விளையாடுவது, ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலையாகவே இருக்கின்றது என்பது, அரங்கேறும் சம்பவங்களில் இருந்து புலப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில், எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தள்ளுபடி செய்யப்படுகின்றன. இன்னும் சிலர், வழக்குகளில் இருந்தே விடுவிக்கப்பட்டு உள்ளனர்; தடைகள் தளர்த்தப்படுகின்றன. அதேபோல, தற்போது எதிரணியில் இருப்போருக்கு எதிராக, வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

நாடாளுமன்றம் என்ற உயரிய சபையில், தண்​டனைக் கைதியும் விளக்கமறியல் கைதிகள் இருவரும், இருக்கின்றனர். குற்றஞ்சாட்டப்பட ஒருவரை, குற்றவாளியாக நீதிமன்றம் இனங்காணும் வரையிலும், சந்​தேக நபராகவே பார்க்கவேண்டும். ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர், குற்றஞ்சாட்டப்படுவதும், குற்றமில்லையென நிரூபணம் செய்யப்படுவதும் வழக்கமாகிவிடுகிறது.

ஆனால், எவ்விதமான குற்றச்சாட்டுகளும் இன்றி, சிறைச்சாலைகளில் பல வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு, எவ்விதமான விமோசனமும் கிடைக்கப்பெறாமல் காலம் நகர்ந்து செல்கின்றது என்பது மட்டு​மே உண்மையாகும். அப்படியானால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் வகிபாகம் என்ன, ஒரு சட்டிக்கு இரண்டு அகப்பைகளையா வைத்திருக்கின்றது?

வில்பத்து தேசிய வனாந்தர கல்லாறு சரணாலயத்தில், தன்னுடைய சொந்தச் செலவில் மரக்கன்றுகளை நாட்டுமாறு விளக்கமறியல் கைதியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாட் பதியூதீன் எம்.பிக்கு தீர்ப்பளிக்கப்பட்டது. அதே​போன்​ற தீர்ப்புகள், இன்னும் சில வழக்குகளுக்கு வழங்கப்படுமாயின், நிலைமை​ என்னவாகுமெனச் சமூக வலைத்தளங்கள் கிண்டல் செய்திருக்கின்றன.

கொலைக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அப்படியாயின், கடந்த ஐந்து வருடங்களாகப் பிணை வழங்கப்படாமைக்கான காரணம், புரியாத புதிராகவே இருக்கின்றது.

‘சட்டம், சிறிய பூச்சிகளை மட்டுமே பிடித்துக்கொண்டு, குளவி போன்ற பெரிய பூச்சிகளை வெளியேறவிடும் ஒரு சிலந்திவலை’ என்கிறார் ஜோனாதன் சுவிஃப்ட். இவ்வாறான நிலைமையொன்று, எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது. சட்டம் யாவருக்கும் சமமானதாகவே இருக்கவேண்டும் என்பதை, நாமும் வலியுறுத்துகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .