2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சமூகங்கள் இரண்டுபட்டால் ‘கூத்தாடி’க்குத்தான் கொண்டாட்டம்

Editorial   / 2021 மார்ச் 04 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகங்கள் இரண்டுபட்டால் ‘கூத்தாடி’க்குத்தான் கொண்டாட்டம்

பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதை விடவும், ஊதிப் பெருப்பித்து, பிரச்சினையில் குளிர்காய நினைப்போரில், ஒருசில  அரசியல்வாதிகளின் வகிபாகம் மிகமிக முக்கியமானதாய் இருக்கும். ஒரு சிறு தணலைக் கனலாக்கும் அளவுக்கு, தலைகீழாகச் சிந்திக்கும் திறமை, அந்த ஒருசிலருக்கே உண்டு.

இங்குதான், வாக்களித்தவர்களும் மக்களும் சமூகங்களும் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும். இல்லையேல், தணலாகக் கனன்று கொண்டிருக்கும் பிரிவினைக்குள் நுழைந்து, குளிர்காய்ந்துவிட்டுச் சென்றுகொண்டே இருப்பர். ஊதிப் பெருப்பிக்கப்பட்டமையால், இரண்டு சமூகங்களுக்கு இடையே ஏற்படும் பிரிவினை சதாகாலமும் தீர்க்கமுடியாது, புகைந்துகொண்டே இருக்கும்.

இரண்டு ஊர் மக்களிடத்தில் கசப்புணர்வுகள் ஏற்படுமாயின், அறிவு பூர்வமான மக்கள், ஒப்புக் கொள்ளக்கூடிய பல சமாதானங்களைக் கூறி, அம்மக்களின் விரோத மனப்பான்மையைப் போக்கும் வகையில் செயற்படச் சிந்திப்பர்.

ஆனால், ‘ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பர். அதாவது, கூத்தாடிக்கு வருமானம் அதிகரிக்கும். இவ்வாறே, அரசியலாடும் கூத்தாடிகளும் ‘ஊரை’ இரண்டாக்கும் நாசகார வேலைகளை, மிகவும் சூட்சுமமாகச் செய்கின்றார்கள்.  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை, (ஜனாஸாக்களை) மையவாடியில் புதைக்குமாறு, கோரிக்கைக் கடிதங்கள் கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், கிளிநொச்சி, இரணைத்தீவின் (தீவு) மீது, கண் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் ‘கண்’  இரண்டு சகோதர இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் ஓரவஞ்சனையான பார்வையாகும்.

குழாய் நீர் வசதிய‌ற்ற அத்தீவின் நீர்மட்டம் ஏறியிறங்கும் தன்மைகொண்டது. இவ்வாறிருக்கையில், புதைக்கப்படும் கொவிட்-19 சடலங்களிலிருந்து வைரஸூகள், நீரூடாகப் பரவாது என்பதற்கான உத்தரவாதம் என்ன? மக்கள் நடமாட்டம் இல்லாததும் வரட்சியானதுமான பிரதேசங்கள் பல இருக்கையில், இத்தீவைத் தேர்வு செய்தமைக்கான பின்புலம், என்னவென வினவுகின்றோம்.

இதுதான், இரண்டு சிறுபான்மை இனங்களுக்கிடையில், இன்றேல், சிறுபான்மையினர் கடைப்பிடிக்கும் மதங்களுக்கு இடையில், முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதற்கு மிகவும் சூட்சுமமான முறையில் விதைக்கப்பட்ட நச்சுவிதையாக அடையாளம் காணப்படுகிறது.

இரணைத்தீவில் வாழும் சுமார் 174 குடும்பங்களைச் சேர்ந்த எவருமே கொரோனா வைரஸ் தொற்றுக்குள் சிக்கிக்கொள்ளவில்லை. கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை, இரணைத்தீவில் புதைப்பதன் ஊடாக, கொரோனா தங்களையும் ஆட்கொண்டுவிடுமென அம்மக்களிடத்தில் எழுந்திருக்கும் அச்சம் நியாயமானது.

‘சடலங்களைப் புதைக்கவும் முடியும்’ என அரசிதழில் வெளியாகியுள்ளது. மையவாடிகளில் புதைக்கலாமென முஸ்லிம்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்படியாயின், ​வேறு இடங்களைத் தேடியலைவது ஏன்? “இதுதான், முஸ்லிம் சமூகத்தைத் துன்புறுத்தும் இனவெறிச் செயல்’ என, ரவூப் ஹக்கீம் கடுந்தொனியில் எச்சரித்துள்ளார்.

ஒவ்வொரு மனிதரிடத்திலும் மனிதாபிமானம், அன்பு, பாசம், ஒற்றுமை ஆகியன வளர்க்கப்பட்டுள்ளன. அதற்குள் புகுந்து கூத்தாடத் துடிக்கும், ‘கூத்தாடிகள்’ தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டுமென்ப​தே எங்களது அவதானிப்பாகும்.

(சிந்தனைச் சித்திரம்- இணையம்) 04.03.2021

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .