2024 மார்ச் 28, வியாழக்கிழமை

செரோவின் மெய்யியலும் முதலில் குத்திக்கொள்ளத் துடித்தலும்

Editorial   / 2021 பெப்ரவரி 19 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செரோவின் மெய்யியலும் முதலில் குத்திக்கொள்ளத் துடித்தலும்

 

எங்களுக்குக் கிடைக்காதா என, ஏங்கித் தவிப்போரும், எங்களுக்கெல்லாம் வேண்டாமென ஒதுக்கித்தள்ளுவோரும், எங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கவேண்டுமென முண்டியடித்துக் கொள்வோரும், உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். அது ‘கிடைப்பதை’ பொறுத்தே அமைந்திருக்கும்.

 

உதாரணமாக, அன்னதானத்துக்குச் சென்று பந்தியில் அமர்ந்து உண்பதற்கு ஒரு பிரிவினர் வெட்கப்படுவர்; தானமாக எதையாவது வழங்குவதற்கு மற்றுமொரு தரப்பினர் முயற்சிப்பர், எவர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நமக்காக மட்டும் வாழ்ந்தால் போதுமென மற்றோர் தரப்பினர் வாழ்வர்.

ஆனால், கொவிட்-19 நோய்க்கான தடுப்பூசியென்பது, ‘கிடைப்பதை’ப் பொறுத்து அல்ல; சகலருக்கும் அத்தியாவசியமானதாய் உள்ளது. அதனால்தான் என்னவோ, பலரும் முந்திக்கொள்கின்றனர். ‘பெரியண்ணா’வால் வழங்கப்பட்ட இலவச தடுப்பூசியை, ஏற்றுவதற்றான ‘முன்னுரிமை’ தொழில்ரீதியாக வகைப்படுத்தப்பட்டது, படையினர், சுகாதாரத் துறையினர், பொதுமக்கள் என்றடிப்படையில், தடுப்பூசியை ஏற்றியிருந்தாலே, ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் போதாமல் போயிருக்கக்கூடும். ஆனால், இன்னும் மீதமிருக்கிறது என்பதால், பலரும் குத்திக்கொள்ளவில்லை என்றே அர்த்தப்படுகின்றது.

ஒவ்வாமையால் ஏற்பட்ட மனப்பிராந்தியால், பலரும் பின்வாங்கி இருக்கக்கூடும். ஆனால், அரசியல்வாதிகள் பலரும் தடுப்பூசியை ஏற்றிவிட்டனர். அமைச்சரவையில் இருப்போர், தமது குடும்பத்துக்கே களவாக ஏற்றிக்கொண்டனர் என்பதே, எதிரணியினரின் குற்றச்சாட்டாகும்.

மக்களுக்கு ஏற்றியதன் பின்னரே, தங்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அறிவித்துவிட்டனர். இதற்கிடையில், கொவிட்-19 நோய்கான தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட பலருக்கும், கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகின்றது.

இதன்போதுதான், உரோமானியரும் மெய்யியலாளரும் அரசறிவாளரும்  வழக்கறிஞர் எனப் பன்முகத் தளங்களில் தடம்பதித்துப் பெயர்பெற்றவர் மார்க்கஸ் துல்லியஸ் சிசெரோ. இவர், கி.மு 43இல் எழுதிய வரிகள் இன்றும் பொருத்தமாக அமைகின்றன.

இவை, அரசியல்வாதிகள் சலருக்கும் பொருந்துமா, பொருந்தாதா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவை; ஆனால், கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் வேகம், களவாக ஏற்றிக்கொண்டிருந்தால், நிச்சயமாகப் பொருந்தும்.

ஒன்பதாகத் தொழில்களை வகைப்படுத்திய சிசெரோ, ‘ஏழை- உழைப்பு, உழைப்பு; செல்வந்தர்- ஏழையைச் சுயநலமாய் பயன்படுத்தல்; படையினர்- இவை இரண்டையும் பாதுகாத்தல்; வரி செலுத்துவோர்- மேல் குறிப்பிட்ட மூன்றுக்கும் செலுத்தல்; வங்கியாளர்- மேலே குறிப்பிட்ட நான்கையும் கொள்ளையடித்தல்; சட்டத்தரணிகள்- மேலுள்ள ஐந்தையும் தவறாக வழிநடத்தல்; வைத்தியர்கள்- ஆறுக்கும் கட்டணம் அறவிடல்; குண்டர்கள்- அச்சுறுத்தல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பதாவதாக அரசியல்வாதிகளை வகைப்படுத்திய சிசேரா, அரசியல்வாதிகள்- மேலே குறிப்பிடப்பட்ட எட்டையும் தம் கணக்கில் வைத்து, மிகச் சந்தோஷமாக வாழ்தல்’ எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், அவரது மெய்யியல் இன்றைக்கும் பொருத்தமானதாகத்தான் இருக்கின்றது என்பது மட்டுமே எங்களுடைய அவதானமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X