2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நினைவுகூரலை தடுத்தாண்டால் மனஸ்தாபங்களே ஏற்படும்

Editorial   / 2021 மே 15 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நினைவுகூரலை சட்டங்கள் தடுத்தாண்டால் மனஸ்தாபங்களே ஏற்படும்

அனைவருக்குமான அறிவித்தலொன்றை பிறப்பித்தால், அது தன்னை மட்டுமே குறி வைத்ததாகப் பலரும், தங்களுக்குத் தாங்களே நினைத்துக்கொள்வர். அதைப்போலதான், அமுலில் இருக்கும் 76 மணிநேர முழு அடைப்புக்கும் பல்வேறான கற்பிதங்கள் உருவாக்கப்படுகின்றன.

முடக்கமா, பயணக்கட்டுப்பாடா? என்பது தொடர்பில் தெளிவே இல்லாமல் இருந்தது. அதன்பின்னர், உத்தியோகபூர்வமாக  விடுக்கப்பட்ட அறிவிப்பு, இருந்த கொஞ்சநெஞ்ச தெளிவையும் சுக்குநூறாக்கிவிட்டது.

ரமழான் பெருநாளை இலக்குவைத்தே, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக, குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தப் பயணத்தடை, வெசாக் நிறைவடையும் வரையிலும் நீடிக்குமாயின், ‘ரமழான் இலக்கு’ என்பது பொய்த்துவிடும்; நீடிக்காவிடின், பிரித்தாளுகை அம்பலமாகும்.

தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், இவ்வாறான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இருந்தால், கொரோனாவின் மூன்றாவது தாண்டவத்துக்குள் சிக்கித்தவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. 

மறுபுறத்தில், முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தையும், நினைவேந்தலையும்  தடுத்தாற்கொள்ளவே, சட்டம் இறுக்கப்பட்டதாக மற்றுமொரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆக, சிறுபான்மை இன மக்களே, அதியுச்ச இலக்காக வைக்கப்பட்டு உள்ளனர் எனப் பலரும் கருதுகின்றனர். அவற்றையெல்லாம் உறுதிப்படுத்தும் வகையிலான சம்பவங்களே அரங்கேற்றப்படுகின்றன.

அதிலொன்று, முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் சிதைக்கப்பட்டு, பொது நினைவுக்கல் மாயமாகி உள்ளமையைக் குறிப்பிடலாம். வடக்கு, கிழக்கில், பாதுகாப்பு படையினரின் கண்களில் மண்ணை இலகுவில் தூவிவிட முடியாது. ஏனெனில், அங்கிருக்கும் சனத்தொகையை விடவும் படையினரின் எண்ணிக்கை அதிமாகும் என்பதே, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளின் குற்றச்சாட்டாகும். 

முள்ளிவாய்க்காலில் குழுமி இருந்தவர்களுக்கும், அங்குவந்த படையினர், பொலிஸார் ஆகியோருக்கு இடையில், கடுமையாக வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னரே, இரவோடு இரவாக, நினைவுத்தூபி சிதைக்கப்பட்டுள்ளது. இறுதியுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து நிர்மாணிக்கப்பட்ட நினைவுச்சின்னம் சிதைக்கப்பட்டுள்ளது. இது ஓர் இனத்தின் அடையாளத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் ஒரு கட்டம் மட்டுமேயாகும்.

பொலிஸாரின் கூற்றின் பிரகாரம், ‘கொரோனா சட்டம்’ முள்ளிவாய்க்காலில் பாய்ந்திருக்குமாயின், குருந்தூரில் படை அதிகாரிகள் புடைசூழ, பிரித் ஓதும் போது, எங்குபோனது அந்த ‘கொரோனா சட்டம்’? இங்குதான், ‘ஒருநாடு; இருசட்டங்கள்’ வெளிசத்துக்கு வந்தன.

மரணித்த தங்களுடைய உறவினர்களை, ஒவ்வொருவரும் வருடாவருடம் நினைவுகூர்வர், யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்கான தேசிய நினைவுகூரல், மே 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கையில் மரணித்த இந்திய இராணுவத்தினரும் மறக்கப்படுவதில்லை. கார்த்திகை வீரர்களும் நினைவு கூரப்படுகின்றனர்.  

நினைவுகூரலை சட்டங்கள் தடுத்தாண்டால், மனஸ்தாபங்களே ஏற்படும்.  அதில் குளிர்காய்ந்து, உண்மையான பிரச்சினைகளை மூடி மறைப்பதற்கு இடமளிக்கக்கூடாது. மரணித்தவர்களை நினைவுகூருவதற்கு இடமளிப்பதன் ஊடாக, மனத்திலிருக்கும் பாரம் இறக்கிவைக்கப்படும் என்பதை, ஆட்சித் தரப்பு உணர்ந்துகொள்வது நாட்டுக்கு நலம். (14.05.2021)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X