2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

பகைவர் நெருங்கி வருகையில் ஓடி, ஒட்டிக்கொள்ளக் கூடாது

Editorial   / 2020 நவம்பர் 27 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகைவர் நெருங்கி வருகையில் ஓடி, ஒட்டிக்கொள்ளக் கூடாது


“பகைவர்கள் நெருங்கி வருகையில், மிகமிக அவதானமாக இருக்கவேண்டும்” என்பது அறிஞர்களின் அறிவுரை. அவ்வாறு வருவோரை, துரத்திவிடாது, அரவணைத்துக் கொண்டு நடக்கவேண்டும். ‘நம்பி நடவாதே; நம்ப நட’ எனவும் கூறி இருக்கின்றனர். இது சகல சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தாது.

கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலையின் வீச்சை விடவும், இரண்டாவது அலையின் வீச்சு, பல மட்டங்களுக்கு வியாபித்துவிட்டது. ஆடைத்தொழிற்சாலையில் தொடங்கி, மீன் ​சந்தைக்குள் சென்று தாண்டவமாடி, சிறைகளுக்குள்ளும் புகுந்துவிட்டது.
இவ்விரு அலைகளாலும் இதுவரையிலும் 87 பேர் மரணித்துள்ளனர்: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். கொத்தணி, கொத்தணியாகக் குறிவைத்து, சிறைச்சாலைக்கு உள்ளும் புகுந்ததால், கைதியின் முதலாவது கொரோனா மரணமும் நேற்று (23) பதிவானது.

இதற்கிடையில், பாடசாலைகளும் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், மாணவர்களின் வருகையில் பெரும் வீழ்ச்சியே ஏற்பட்டது. தரம் 6 முதல் 13 வரையிலான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக, பாடசாலைகளை திறப்பதை சற்று தாமதப்படுத்தியிருக்கலாம்.

இன்னும், சில பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன. மூன்றாம் தவணை விடுமுறைக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றன என்பதால், பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதில் அர்த்தமில்லையென, முன்கூட்டியே சுய தீர்மானத்தை எடுத்த பெற்றோர் பலர், தங்களுடைய பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பாமலே விட்டுவிட்டனர்.

டிசெம்பரில் நடத்தவேண்டிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆகையால், அந்த வகுப்புகளுக்கு மட்டுமே, பாடசாலைகளைத் திறந்திருந்தால், அதுவே சாலச்சிறந்த தீர்மானமாக அமைந்திருக்கும்.

2020 மூன்றாம் தவணை, இன்னுமொரு மாதத்தில் நிறைவடைந்துவிடும். சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18ஆம் திகதி ஆரம்பமாகினால், பாடசாலைகளை மூடவேண்டும். ஆகையால், அதுவரையிலும், தற்போது முன்னெடுக்கப்படும். இணையத்தள வழி ஊடான கல்விச் செயற்பாடுகளை நீடித்திருக்கலாம்.

கொரோனா வைரஸ் தொற்றிக்கொள்ளாது என நம்புகின்றமாதிரி நடத்தைகள் அமைந்துவிடக்கூடாது; தொற்றுப் பரவாதென்ற அதீத நம்பிக்கை பிறக்கும் வரையிலும், மிகமுக்கிய தீர்மானங்களை எடுப்பதை, அதிகாரத்தில் இருப்பவர்கள் தவிர்த்திருக்கலாம்; இனியாவது தவிர்க்கவேண்டும்.

‘தீபாவளி ​கொத்தணி’ ஏற்பட்டுவிடுமோ என்ற பேரச்சம் எம்மையெல்லாம் சூழ்கொண்டிருந்தது. தீபாவளிக்காகச் சென்றவர்களால், பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்; பெருந்தோட்டங்கள் பல முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாடசாலைகளுக்குள் புகுந்து, ‘மாணவர் கொத்தணி’ ஏற்பட்டுவிட்டால், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே முடியாது.

எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையில் விளையாடிவிடக் கூடாது. வீடுகளில் இருக்கும் இக்காலத்தில், கொ​ரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்பாதுகாத்துக் கொள்ளும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பில் கற்பிக்கவேண்டும்.

ஆக மொத்தத்தில், மாணாக்கரைப் பலிக்கடாவாக்கி, வந்தபின் யோசிக்காதீர்கள்; வருமுன்னே யோசித்துத் தீர்க்கமான முடிவுகளை எட்டவேண்டும். அம்முடிவுகள், ‘கொரோனா கொத்தணி’ மரவரிப்படமாகி விடக்கூடாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .