2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘பச்சோந்தி’ யை காட்டிக்கொடுத்த ‘பெட்டிக்கடை’

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘பச்சோந்தி’ வைரஸைக் காட்டிக்கொடுத்த ‘பெட்டிக்கடை’ புலனாய்வு

எப்படியாவது சம்பாதித்து விடுவோமெனத் தருணங்களைப் பார்த்து, விலைகளைக் கூட்டி, கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொள்ளும் ‘பெருமுதலை’கள் இருக்கையில், ‘விற்பனை’க்கு அப்பால் ‘பெரும் சந்தேகம்’ கொண்ட பெட்டிக்கடைக்காரரால், நாமெல்லாம் உயிருடன் இன்னும் இருக்கின்றோம் என்றால், அதுதான் உண்மை.

கொரோனா வைரஸின் முதலாவது அலையை, சாதகமாகப் பயன்படுத்தி, ‘அள்ளி’க்கொண்டவர்கள், இரண்டாவது அலையின் வீரியத்தைக் கண்டு, அஞ்சுகின்றனர் என்றுதான் நினைக்கவேண்டும். சம்பாத்தியம் என்பதற்கு அப்பால், அச்சமும் சூழ்கொண்டுவிட்டது.

வாழவேண்டும்; அதற்காக, எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நுகர்வோரே தெய்வங்கள். அதுவும், ஆங்காங்கே பெட்டிக்கடைகளை வைத்திருப்போர், கிடைக்கும் அன்றாட வருமானத்திலேயே குடும்பத்தையே ஜீவியம் நடத்தவேண்டும். கொரோனா வைரஸ், முதலாளிகளை மட்டுமன்றி, தெய்வங்களையும் வீட்டுக்குள்ளேயே முடக்கிவிட்டது.

வர்த்தக நிலையமொன்றில், குறிப்பிட்ட பொருள்கள், ஆகக்கூடுதலாக விற்பனையாகுமாயின், அதையே அள்ளியள்ளிக் குவித்து, விற்றுத்தீர்த்து விடுவோருக்கு மத்தியில், அப்பொருள்களை ஏன், அள்ளிக்கொண்டு போகின்றார்களெனச் சந்தேகம் கொண்டு, புலனாய்வுத்துறையினருக்குத் தகவல் கொடுத்தமையால், பேலியகொடை கொரோனாவிலிருந்து பலரும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது.

அந்தப் பெட்டிக்கடையில், வலி நிவாரணிக் குளிசைகள், வழமைக்கு மாறாக விற்றுத்தீர்வதை, சந்தேகக் கண்கொண்டு பார்த்த முதலாளி, இரகசிய தகவலைக் கொடுத்துள்ளார். அவர், நினைத்திருந்தால், குளிசைகளைக் குவித்து, பெட்டிக்கடையின் வர்த்தகத்தைப் பெருக்கியிருக்கலாம். பெரும் முதலாளிகளுக்கு மத்தியில், அந்தப் பெட்டிக்கடை முதலாளியை நாமெல்​​லோரும் மதிக்கவேண்டும்.

பெட்டிக்கடை முதலாளியின் புலனாய்வால், பெரும் எண்ணிக்கையானோர், நாடுபூராவும், குறுகிய காலத்தில் சிக்கினர். ஒரு மாதத்துக்குள் நால்வர் மணித்துள்ளனர். இந்தப் புள்ளிவிவரங்கள் பெரும் ஆபத்தை இட்டுச்செல்லும். இப்போதிருந்தாவது, முட்டாள் தனத்தையும் தலைக்கனத்தையும் கைவிடவேண்டும்.

“முகக்கவசங்கள் அணிந்தால் அரிக்கிறது; மூச்சுவிடுவதில் பெரும்​ ​சிரமம்” எனச் சிலர் புலம்பித்திரிகின்றனர். கையுறைகளை அணிந்திருந்தால், ஏதோவொரு ஜந்து பயணிப்பதாகவே பலரும் வேடிக்கைபார்ப்பர். இங்கு, அறியாமையாலேயே மடிந்துபோகப் போகின்றோமா; இல்லையேல் தற்காத்துக்கொள்ளப் போகின்றோ​மா என்பதெல்லாம், அவரவர் கைகளிலேயே உள்ளது.

தற்பாதுகாப்பின் போது, பல்​வேறான நெருக்கடிகளுக்கும் முகஞ்சுளிப்புகளுக்கும் முகங்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படலாம். கோபப்பட்டாலும் பரவாயில்லை; வீட்டுக்குள் யாரையும் அண்டவிடாதீர்கள்; குடும்பத்துடன் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பது சாலச்சிறந்தது.

கண்களுக்கே தெரியாத கொரோனா வைரஸ், எந்தச் சூழ்நிலைக்கேற்பவும் தன்னைமாற்றிக் கொண்டு உயிர்வாழ்ந்து, உயிரைப் பறித்தெடுக்கும்.​ மொத்தத்தில், இடம், காலநிலை, சூழல், மனிதர்களின் நோயெதிர்ப்பு சக்திக்கேற்ப, மாற்றிக்கொள்வதால், ‘பஞ்சோந்தி கொ​ரோனா வைரஸ்’ எனக்கூறினாலும் தவறில்லை.

தொற்றாளர்களின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தல் என்பன அதிகரித்துகொண்டே செல்கிறது. மரணங்களும் மனங்களுக்கு அச்சமூட்டுகின்றன. இவற்றையெல்லாம் வெல்லவேண்டுமாயின், சுகாதார வழிகாட்டல்களை அவ்வாறே கடைப்பிடிப்போமென ஒவ்வொருவரும் உறுதிப்பூண்டு கொள்ளவேண்டும் என நாமும் வலியுறுத்துகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .