2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பெரும் புள்ளிகளைக் காப்பாற்றிய ஒரேயொரு புதைகுழி

Editorial   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் புள்ளிகளைக் காப்பாற்றிய ஒரேயொரு புதைகுழி

குற்றவாளிகள் பிறப்பதில்லை; சூழவிருக்கும் சமூகத்தினரின் செயற்பாடுகளால் உருவாக்கப்படுகின்றனர். அவ்வாறானோரின் மரணத்துக்கு நிமிடம் குறிக்கப்பட்டிருக்கும் என்பர். பயங்கரவாதிகளும் அவ்வாறே கணிக்கப்படுகின்றனர். அதனால்தான் என்னவோ, பயங்கவாதிகளென முத்திரை குத்தப்பட்டோருக்கும் கல்லறைகள் இருப்பதில்லை.

கல்லறைகள் கட்டப்பட்டிருந்தாலும் அவை இடித்தழிக்கப்பட்டமையே வரலாறு. உலகத்தையே ஆட்டிப்படைத்த இயக்கங்களின் முக்கிய தலைவர்கள், மோதல்களில் உயிரிழந்தால், அவ்வாறானவர்களின் சடலங்கள், கல்லோடு கட்டி, ஆழ்கடலில் போடப்பட்டுவிடு​மெனக் கூறப்படுகின்றது.

இயக்கக் கொள்கையை அடியொற்றி, எதிர்காலத்தில் எவரும் உருவாகிவிடக்கூடாது; தலைவனின் வழியில் பின்செல்லக்கூடாது என்பதற்காக, ‘தடமழிப்பு’ மிகக் கச்சிதமாக முன்னெடுக்கப்படும். இவற்றுக்கெல்லாம் பின்னால் ஓர் அரசியல் இருக்கும்.

மாகந்துர மதுஷ் என்பவரின் மரணத்தின் பின்புலத்திலும் ‘ஓர் அரசியல்’ இருப்பதாகவே குற்றஞ்சாட்டப்படுகின்றன. சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர், பொலிஸ் விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் நிறுத்தி, நீதிமன்ற உத்தரவின் பிரகாரமே தடுத்துவைத்து விசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இது பொருந்தாது.

ஆனால், போதைப்​பொருள் வர்த்தகரென அறியப்பட்ட மாகந்துர மதுஷ், எந்தவொரு நீதிமன்றிலும் ஆஜர்படுத்தப்படாது, தொடர்ச்சியாகத் தடுத்துவைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளைக் காண்பிக்க அழைத்துச் சென்றவேளை, மறைந்திருந்தவர்கள் சுட்டதில் மதுஷ் மரணித்துவிட்டாரென இறுதியில் செய்திகள் வெளிவந்தன.

‘ஆயுதம் ஏந்தியவர், ஆயுதத்தாலே மரணிப்பார்’ என்பர். பாதாள உலகக் கோஷ்டியினருக்கு இது மிகமிகப் பொருந்தும். அவ்வாறானோரின் பின்புலத்தில், அரசியல் அதிகாரம் மிக்கவர்கள் இருப்பர். மதுஷின் பின்புலத்திலும் அரசியல்வாதிகள் பலர் இருந்துள்ளனரெனக் கதைகள் அடிப்பட்டன.

“ஒருவேளை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தால்​, பெரும்புள்ளிகளின் பெயர்களை மதுஷ் கக்கியிருப்பார்; அவரது படு​கொலை, பல உண்மைகளை மறைத்து விட்டது” என்ற விஜித்த ஹேரத் எம்.பியின் கூற்றையும் மிக அவதானத்துடன் பார்க்கவேண்டும்.

பல மாத காலமாகத் தடுப்பிலிருக்கும் ஒருவரிடமிருந்து, தொடர்மாடிக் குடியிருப்பின் 10ஆவது மாடியில் அதுவும், 10ஆம் இலக்க வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தொடர்பில் தகவல் தெரியுமென்றால், தகவலாளியுடன் அவ்விடத்துக்குச் சென்ற​தேன் என்பதை விமர்சிக்கும் வகையிலான சிந்தனைச் சித்திரங்கள் கீறப்பட்டுள்ளன.

குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை, குற்றவாளியாக நீதிமன்றம் இனங்காணும் வரையிலும், சந்தேகநபராகவே பார்க்கவேண்டும். அவருக்கான பாதுகாப்பை, தடுத்துவைத்திருக்கும் பிரிவு உறுதிப்படுத்தவேண்டும். மதுஷ் விடயத்தில் இவையெவையும் பின்பற்றப்படவில்லை.
எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதைப் போல, 80க்கும் மேற்பட்ட பெரும் புள்ளிகள், மதுஷிடம் மண்டியிட்டு இருந்துள்ளனர். அவை அம்பலமாகுவதற்கு முன்னரே, ஒரேயொரு புதைகுழி, அவர்களையெல்லாம் காப்பாற்றிவிட்டது.

குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில், மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனினும், தண்டிக்கப்படும் விதம், “இது திட்டமிட்ட செயல்”, “ஒரு நாடகம்”, “ பொலிஸ் என்கவுண்டர்” என யூகிக்கும் அளவுக்கு அமைந்துவிடக்கூடாது. அது சட்டத்தின் ஆட்சிக்கு இழுக்கேற்படுத்தும் என்பது மட்டுமே உண்மை. (21.10.2020)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X