2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பவளவிழா கண்ட பட்ஜெட்டில் ‘பாங்கறியாதவன்’ பாவம்

Editorial   / 2020 நவம்பர் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பவளவிழா கண்ட பட்ஜெட்டில் ‘பாங்கறியாதவன்’ பாவம்

இரண்டு வருடங்களுக்குப் பின்னர், முழுமையான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்), நேற்று (17) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது இலங்கையின் 75 ஆவது வரவு – செலவுத் திட்டமாகும். அதாவது, இலங்கையின் பட்ஜெட்டுகள் பவள விழாவைக் கண்டுள்ளன.

நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகள் அடங்கிய யோசனையின் பிரகாரம், நீண்டகால ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் வகையிலான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஆறு சதவீதமாகப் பேணுவதற்கு எதிர்பார்த்துள்ளமை யோசனைகளில் ஒன்றாகும். அதைக் கட்டியெழுப்பும் வகையில், வரி மறுசீரமைப்பு, உள்ளூர் உற்பத்திகளுக்கான ஊக்குவிப்புகளுக்கான யோசனைகளும் அடங்கியிருக்கின்றன.
ஒவ்வொரு துறைகளையும் மேம்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள், உச்சியைத் தொட்டு குளிரச்செய்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஆகக் கூடுதலான உத்வேகத்தைக் காண்பிக்கவேண்டும்.

பட்ஜெட் என்றால், என்னென்ன பொருட்களுக்கான விலைகள் குறையப்போகின்றன, சம்பளம், கொடுப்பனவுகள் அதிகரிக்குமா, எவற்றுக்கெல்லாம் விலைகள் கூடப்போகின்றன என ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருப்பர். அந்தக்காலம் கடந்துபோய், இப்போது ‘நிதியொதுக்கீடு’கள் மட்டுமே முன்னிலை வகித்துவருகின்றன.

பட்ஜெட் சமர்ப்பிக்கும் நாளன்று, வானொலிகள், தொலைக்காட்சிகள் முன்பாக அமர்ந்திருந்த காலம் மாறிப்போய்விட்டது. மறுநாள், நாளேடுகளை வாங்கி வாசித்து மகிழ்ந்த காலமும் மலையேறிவிட்டது. சபைகளின் மேசைகளில் தட்டி, ஆரவாரஞ்செய்து உச்சாகமூட்டுதல் மங்கியிருந்தன. நேற்றைய தினமும் முன்பாதியில் இவ்வா​றான​தொரு நிலைமையையே அவதானிக்க முடிந்தது.

கடந்த இரண்டு வருடங்களாக வரவு-செலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்படாமல், மக்களும் பொருளாதார துறைகளைச் ​சார்ந்தோரும் ஏமாற்றப்பட்டனர். இல்லையேல் ஓரளவுக்கேனும் அத்துறைகளைச் சார்ந்தோருக்கு நிவாரணம் கிடைத்திருக்கும். இந்த பட்ஜெட்டிலும் உடனடியாக அமுலாகி, மக்களை மகிழ்விக்கும் வகையிலான அறிவிப்புகளைக் காணக்கிடைக்கவில்லை.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக, இழுபறியில் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மனதைக் குளிர்மையடையச் செய்யும் வகையில், 1,000 ரூபாய் சம்பள உயர்வை ஜனவரியிலிருந்து வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. இதன்போது மேசைகள் தட்டப்பட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது.

ஆனால், முறையாக நிர்வகிக்காத தோட்ட நிர்வாகங்களுக்குக் கைக்கட்டுப் போடும் வகையில், சட்ட ஏற்பாடுகள் கொண்டுவரப்படுமென பிரதமர் அறிவித்திருந்தார். இதற்கிடையில், முதலாளிமாருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்; இவையெல்லாம் தொழிலாளர்களின் மகிழ்ச்​சியில் மண்ணைவாரி இறைத்துவிடக்கூடாது.

மக்களுக்கு நிவாரணங்களை அள்ளிவீசி, ஒருமுறை பட்ஜெட்டை சமர்ப்பித்திருந்த, அந்நாள் நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, “பாங்கறியாதவனின் பட்ஜெட்” எனக் கூறியமை, இன்னுமே நினைவில் நின்றிருந்தாலும், பாமரர்களை நேரடியாகக் கவர்ந்திழுக்க வேண்டுமென்பதே பலருடைய எதிர்பார்ப்பாகும். (17.11.2020) (படம்: இணையம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .