2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மணிகளான யோசனைகளுக்குள் பேயைத் தேடிய அரண்டவன் கண்

Editorial   / 2021 ஏப்ரல் 09 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிகளான யோசனைகளுக்குள் பேயைத் தேடிய அரண்டவன் கண்

சிறுபான்மை இனங்களின் மீதான சந்தேகப் பார்வை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றதே தவிர, கொஞ்சமேனும் குறையவில்லையென்பது இடம்பெறுகின்ற ஒவ்வொரு சம்பவங்களும் அச்சொட்டாகப் புடம்போட்டுக் காட்டிவிடுகின்றன.

இளைஞர், யுவதிகளின் கைகளில் பெறுமதிவாய்ந்த நவீன அலைபேசிகளைக் காணலாம். அதில், எவ்வாறானவை தரவிறக்கம் செய்யப்படுகின்றன? ஒளி, ஒலிப் பதிவுகள் தொடர்பில் பலருக்கும் போதியளவு விளக்கமில்லை. அதனால் பலரும் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

அதனால்தான், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த யாழ்ப்பாணம், கோப்பாயைச் சேர்ந்த இளைஞன், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தடைச்செய்யப்பட்ட ஓர் இயக்கமாகும். அவ்வியக்கம் சார்பாக முன்னெடுக்கப்படும் எத்தனிப்பு பிரசாரங்கள் யாவுமே குற்றமாகும். ஆகையால், தடைசெய்யப்பட்ட இயக்கங்கள், நபர்கள், அமைப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும். இல்லையேல், ஒருசில நொடி வீடியோக்கள், கூண்டுக்குள் அடைத்துவிடும்.

பேயின் பயத்தில் இருப்பவன், பேய்க் கதைகள் பலவற்றைக் கேட்டு, மனதில் பயத்துடன் இருப்பான்; அவ்வாறானவன் இருட்டில் நடக்கும் போது, எதைப்பார்த்தாலும் பேய் என்றெண்ணி பயப்பிடுவான். அதனைதான் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பர். கைதுகளுக்குப் பின்னாலும் ‘அரண்டவன்’ இருக்கின்றான்.

தனது, மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால், வீதிகளில் கழிவுகளை வீசினால் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் தண்டமாக அறவிடப்படும்; அதே தவறை மீண்டும், மீண்டும் செய்தால், தண்டம் இரட்டிப்பாகும் என்ற, யாழ். மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணனின் யோசனைகள், உண்மையில் மணிகளான யோசனைகளாகும்.

ஆனால், அவற்றைக் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐவரடங்கிய மாநகர காவல் படையும் அவர்கள் அணிந்திருந்த சீருடையும் சட்டச் சிக்கலை ஏற்படுத்திவிட்டன. அதற்கான பொலிஸ் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு, சீருடைகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதாவது, அச்சீருடையின் நிறங்களும் வடிவமைப்பும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொலிஸ் பிரிவு பயன்படுத்திய சீருடைக்கு ஒத்திசைவானதாகுமெனக் குற்றஞ்சாட்டி, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் அப்படையின் செயற்பாடுகளையும் இடைநிறுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

எங்கேயாவது ஒன்றுக்குள் சிக்க வைப்பதற்கான கண்காணிப்புகளே தீவிரமாக இருக்கின்றன என்பதால், ஒவ்வொரு விடயங்களிலும் அவதானமாக இருக்கவேண்டும். உயர்பதவிகளில் இருப்போர் சட்டங்கள், தொடர்பிலான ஆலோசனைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

மாநகர காவல் படையை நிறுவுவதற்கான அனுமதியைப் பாதுகாப்பு அமைச்சில் பெற்றிருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆலோசனைகளைப் பெற்று,  தனது திட்டங்களைத் தீட்டி, செயற்பட்டிருந்தால் மணிவண்ணனின் மணியான யோசனைகளை அமுல்படுத்தி இருக்கலாம். அதனூடாக, பாரிய வெற்றி கிடைத்திருக்கும் என்பதே எங்களுடைய கணிப்பாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .