2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மாதவிடாய் வரியும் ’ சம்மட்டியை ’ கையிலேந்தி நிற்கும் சிலையும்

Editorial   / 2020 நவம்பர் 28 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதவிடாய் வரியும் ' சம்மட்டியை ' கையிலேந்தி நிற்கும் சிலையும்

பிரதான நகரங்கள், சில சந்திகளில் கம்பீரமாய் காட்சியளிக்கும் சிலைகளில் காகங்கள் எச்சமிட்டிருப்பதை பார்த்து பலரும் சிரித்திருப்பர். ஆனால், சிலைகளின் பின்னிருக்கும் வருத்தங்கள் தெரியாமலே போய்விடும். சிலைகளுக்குப் பின்னாலும் ஏதோவொரு வகையில் 'இரத்தம் தோய்ந்த' கதைகள் உண்டு.

'வரி' என்பது ஒவ்வொருவரும் முணுமுணுக்கும் வார்த்தையாகிறது. இறக்குமதி செய்யப்படும் 2,574 பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்படுவதாகத் தகவல். கண்டி யுகத்தில் அறவிடப்படாத எந்தவொரு வரியும் இல்லையாம். யதார்த்தத்தில் மட்டுமன்றி, வரலாறும் வரி முறைமைக்கு பெயர்பெற்றே இருக்கின்றது.

1848களில் உடலுக்கு வரி, நாய் வரி உள்ளிட்ட ஏழு வரிகள் அறவிடப்பட்டுள்ளன. பெண்களின் மார்பகங்களுக்கான 'முலை வரி' இந்தியாவில் இருந்துள்ளது. அது, 'முலை வரியல்ல', 'முளை வரி' அதாவது விளைச்சலுக்கானது எனப் பின்னைய நாள்களில் விளக்கமளிக்கப்பட்டது.

ஆங்கிலேயரின் ஆட்சியில் அறவிடப்பட்ட 2 ரூபாய் உடல் வரியை வழங்காத, ஒவ்வோர் ஆணும் நடு வீதியில் இரண்டு நாள்கள் கற்கள் உடைக்கவேண்டும். கைகளில் கொப்புளங்கள் பழுத்தாலும் கையிலேந்தியிருக்கும் சம்மட்டியை (பெரிய சிலசு) கீழே வைக்கமுடியாது. சாப்பாட்டுக்கு அரைமணிநேரம் இடைவேளை; அவ்வளவுக்கு ஆங்கிலேயரின் சட்டம் கடுமையாக இருந்தது.

உடல் வரிக்கு எதிராகப் போராடிய தொழிலாளர்களின் தலைவரான ஏ.ஈ. குணசிங்ஹவின் சிலைதான், புறக்கோட்டை குணசிங்கபுரவில் இருக்கிறது. அரசியலிலிருக்கும் தலைவர்களின் பின்னால் ஏதோவொரு வகையில் தொழிற்சங்க அரசியல் கலந்திருக்கும்.

ஆகையால், வரிகளுக்கு மேல் வரிகளை விதிப்பதால், மக்கள் படும் துன்பங்கள் ஏராளம். இதில் மறைமுக வரிகளும் அறவிப்படுவதால், சாதாரண மக்களும் தொழிலாளர்களும் பெரிதும் துன்பப்படுவர். 

ஆங்கிலேயர்களின் பாதணிகளின் கீழ், பணிந்து வாழ்க்கையை நடத்துவதற்கு எதிரான போராட்ட வடிவங்கள், வெவ்வேறு தளங்களில் முன்னெடுக்கப்பட்டன. உடல் வரிக்கு எதிராகக் குரல்கொடுத்த குணசிங்ஹ, ஏழ்மையின் நண்பன் ஆகினார். அவரது போராட்ட வெற்றியால், கொழும்பிலிருந்து 1924உம் இலங்கையிலிருந்து 1925ஆம் ஆண்டும் 'உடல்வரி' முற்றாகத் துடைத்தெறியப்பட்டது.

இந்த அரசாங்கம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியில், 'மாதவிடாய் வரி'யை அறவிட முயற்சிப்பதாக, எதிரணி பெண் எம்.பிகள் குற்றஞ்சாட்டினர். ஒரு குடும்பத்தில் வயதுக்கு வந்த பெண்கள் இருந்தால், ஆணுக்கும் அந்தவரி பிரச்சினையாகும். ஆகையால், 'அணையாடை'க்கான 15சதவீத வரியை நீக்குமாறு ஆளும், எதிரணியின் பெண் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சாதாரண குடும்பத்தில் இருக்கும் வயதுக்கு வந்த பெண்களும், வறுமைக் குடும்பங்களில் வாழும் பெண்களும் அணையாடையை கொள்வனவு செய்வதில் பொருளாதார ரீதியில் சிரமப்படுகின்றனர். ஒரு மாதத்துக்கு 50 சதவீத மாணவிகள் பாடசாலைக்குச் செல்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அணையாடைக்கு முன்னர், பழைய துணிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்னுமே சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால், சுகாதார முறையை பேணவேண்டும் இல்லையேல் நோய்த்தொற்றிக்கொள்ளும்.

ஆகவே, 'அணையாடை' குடும்பத்துக்கும் தலைவனுக்கும் சுமையாகிவிடக் கூடாது என்பதால், அதற்கான 'வரி'யை இரத்துச் செய்வதே சாலச் சிறந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .