2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வித்தையென நினைத்து தலையை நீட்டிவிடாதீர்கள்

Editorial   / 2020 நவம்பர் 16 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வித்தையென நினைத்து, தலையை நீட்டிவிடாதீர்கள்

தவறுகளைத் திருத்திக்கொண்டு வாழப்பழகிக்கொள்ள வேண்டும்; இல்லையேல் அறிவுரைகளைக் கூறிக்கூறி அலுத்துப்போனோர், “எக்கேடு கெட்டாவது போகட்டும்” எனக் கைகளை விரித்துவிடுவர். இது, திருந்தாதவர்களைப் பேராபத்துக்குள் தள்ளிவிடும்.  

ஆனாலும், என்னதான் செவிசாய்காவிடினும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் ஒவ்வோர் அரசாங்கமும் மாற்று வழிமுறைகளைக் கையாண்டு, மக்களைக் காப்பாற்றுவதற்காகக் கடும் பிரயத்தனங்களைச் செய்கின்றன.  

நாளை, தீபாவளித் திருநாளாகும். கடந்த காலங்களைப் போல, களைகட்டவில்லை என்றாலும், இத்திருநாளில் ஓர் உறுதிப்பாட்டைச் சகலரும் எடுத்துக்கொள்ளவேண்டும்.  

மக்களுக்குத் தீங்கிழைத்து, வாட்டி​வதைத்த நரகாசுரன் மரணித்த தினமே, தீபங்களேற்றி இருள் அகற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது. இன, மத வேறுபாடுகளின்றிக் கொண்டாடும் பல பெருநாள்கள் உள்ளன. தீபாவளி, தமிழர்களுக்கு மட்டுமே உரித்தாகிவிட்டது. ஆனாலும், எம்மையெல்லாம் ஆட்டங்காணச் செய்துகொண்டிருக்கும் ‘கொரோனா வைரஸ்’ எனும் அரக்கனை அழிப்பதற்காக, ஓரணியில் திரளவேண்டும்.  

கொரோனா வைரஸின் முதலாவது அலையில் முடக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள், மனதளவில் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக, பல்வேறான நாடுகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. நமது நாட்டில், இசைக்கச்சேரிகள் நடத்தப்பட்டன. இம்முறை, தீபங்களையேற்றி புத்துணர்ச்சியை ஊட்டுவோம்.  

ஒன்றைச் செய்யாமல் விடுவதனூடாகப் பல இழப்புகளைத் தவிர்க்கலாம் எனில், அதைச் செய்யாமல் விடுவது மேலானது. அவ்வாறே, முடக்கப்படாத பிரதேசங்களில், தீபாவளியை வெகுசிறப்பாக இன்றி, வீடுகளுக்குள்ளே கொண்டாடுவோம் எனில், தீபாவளி விருந்தாளியாக வரத்துடித்துக் கொண்டிருக்கும் கொரோனா​ வைரஸ் தொற்றிக்கொள்வதில் இருந்து தப்பிக்கொள்ளலாம்.  

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, வீட்டுக்குள்ளே இருங்களென, அடிக்கொரு தடவை அறிவுறுத்தப்பட்டாலும், மனித நடமாட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் பலர், அநாவசியமாக, வேடிக்கை பார்ப்பதற்காக வந்தவர்களாக​வே இருப்பர்.  

வீடுகளிலிருந்து வெளியேறியவர்களை கண்டறிவதற்காக, ‘ட்ரோன் கமெரா’க்களை இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது, வீட்டிலிருக்கும் சிறியவர்களுக்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் ஒரு வித்தையாகக்கூட அமைந்துவிடலாம்.  

பல்லாயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானங்களை, வீட்டுக்​கு வெளியேவந்து அண்ணாந்து பார்க்கத்தான் செய்வர். இந்நிலையில், வீட்டுக்கூரைக்கு மேலாகப் பறக்கும் ‘ட்ரோன்’களைப் பார்க்க, யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆசையை ஒதுக்கிவைத்துவிட்டு, வீட்டுக்குள் இருப்பதுதான் உசித்தமானது.  

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்போரும் இருக்கத்தான் செய்கின்றனர். ‘ட்ரோன் கமெரா’ செய்திகள் வெளியானதன் பின்னர், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போரை, மக்களுக்கு எதிராக அரசாங்கம் திசை திருப்பிவிட்டதென சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. ஆனாலும், வேடிக்கை பார்ப்​பதைத் தவிர்த்து, வீட்டுக்குள்ளே இருந்தாலேயே நமக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .