2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

700 காளைகள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Editorial   / 2020 ஜனவரி 15 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல சர்ச்சைகளுக்குப் பிறகு மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (15) காலை தொடங்கியுள்ளது. ஜல்லிக்கட்டில் 700 காளைகள் பங்கேற்கின்றன.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700 காளைகளை பிடிக்க, 730 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

உடல்தகுதி மருத்துவ பரிசோதனைக்குப்பிறகு காளைகளும், மாடுபிடி வீரர்களும் களமிறங்க அனுமதிக்கப்படுவர். 

காலை 8 மணிக்கு உறுதிமொழி எடுக்கப்பட்டு தொடங்கிய போட்டி, மாலை 4 மணி வரை நடைபெறும். 

போட்டியை நடத்துவது குறித்த சர்ச்சையால், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடைபெறுகின்றது.

மாவட்ட ஆட்சியர் வினய், மாநகர காவல் ஆணையர் டேவிட்சர் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்‌சி ஆணையர் விசாகன் ஆகியோரைக் கொண்ட ஜல்லிக்கட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டையொட்டி 1500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக வாடிவாசலில் இருந்து 8 அடி உயரத்தில் இரட்டை அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு‌ள்ளன. 

வாடிவாசலில் இருந்து பத்து அடி தூரம் வரை தேங்காய் நார்கள் பரப்பப்பட்டுள்ளன. போட்டிகளை கண்காணிக்க 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்ப‌ட்டுள்ளன. 

காளைகளை பரிசோதிக்கவும், மாடுபிடி வீரர்களை பரிசோதிக்கவும், காயமடைபவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யவும் தலா பத்து மருத்துவர்களை கொண்ட 5 மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஒவ்வொரு சுற்றுக்கும் இடையே அதிக மாடுகளை பிடித்த வீரர்கள், அடுத்த சுற்றுகளில் விளையாட அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு சுற்றிலும் 75 வீரர்கள் மட்டுமே களமிறங்க அனுமதிக்கப்படுவர்.

காயம் அடைவோருக்கு சிகிச்சை அளிக்க 10க்கும் அதிகமான அம்பியுலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. கால்நடைகளுக்கான 2 அம்பியுலன்ஸ்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .