2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற பெண்களை பொலிஸார் திருப்பி அனுப்பினர்

Editorial   / 2019 நவம்பர் 17 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரளாவின் சபரிமலையிலுள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு இருந்து வந்த தடையை கடந்தாண்டு செப்டெம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் நீக்கியது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்ததால், அதற்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கடந்தாண்டு சபரி மலைக்குச் சென்ற பல பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கடந்தாண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக் களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஏழு நீதியரசர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்.

ஆனால் கேரள தேவசம் சபை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “சபரிமலை கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்றும், இதை மீறி வரும் பெண்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது” என்றும் தெரிவித்தார்.

இதேபோல் கேரள சட்ட அமைச்சர் பாலன் கூறுகையில், சபரிமலையின் புனிதத்தை கெடுக்க பெண்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்றார்.

இதற்கிடையே முதல் நாளான நேற்று  சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து 30 பெண்கள் நேற்றுக்  காலை பம்பை வந்து சேர்ந்தனர். பம்பையில் பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்களுடைய அடையாள அட்டைகளை வாங்கி அவர்களது வயது, பெயர் உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர்.

அப்போது அவர்களில் 10 பெண்கள் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்தது. அவர்களிடம் சபரிமலையின் மத நம்பிக்கை நடைமுறைகள் குறித்து விளக்கி கூறிய பொலிஸார், இந்த ஆண்டு இளம் பெண்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கவில்லை என்று கூறி அந்த 10 இளம்பெண்களையும் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X