2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

துணிவுள்ளவர்கள் தோற்கமாட்டார்கள்

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கிடைத்த வாய்ப்பு பறிபோன நிலையில், துணிவுள்ளவர்கள் தோற்கமாட்டார்கள் என்று ஷிவேசேனா எம்.பி. சஞ்சய் ராவத் டுவிட்டரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஷிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருந்துவரும் எம்.பி. சஞ்சய் ராவத், திடீரென நெஞ்சு வலி காரணமாக, மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. பாஜகவுக்கு ஆட்சி அமைக்க விடுத்த அழைப்பை அந்தக் கட்சி பெரும்பான்மை இல்லாததால் ஏற்க மறுத்துவிட்டது. அதன்பின் ஆளுநர்,ஷிவசேனாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளிடம் ஆதரவு கேட்பது தொடர்பாக ஷிவசேனா தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். இந்தச் சூழலில் தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக நேற்றுமுன்தினம் மும்பை லீலாவதி மருத்துவமனைக்கு சஞ்சய் ராவத் சென்றார். அப்போது, அவரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துக்குச் செல்லும் இரத்தக்குழாயில் இரு அடைப்புகள் இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆதலால், உடனடியாக எஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்தால்தான் உடல்நிலை சீராகும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்தனர். இதையடுத்து, நேற்றுமுன்தினம் மாலை சஞ்சய் ராவத்துக்கு எஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. அவர் தற்போது நலமாக இருப்பதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஷிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன. நேற்றுமுன்தினம் இரவு வரை எந்த முடிவும் கிடைக்கவில்லை. ஷிவசேனாவுக்கு வழங்கப் பட்ட காலக்கெடு முடிந்துவிட்டதாகக் கூறி, அடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார்.

ஆனால், ஆளுநர் கோஷியாரியைச் சந்தித்துப் பேசிய ஷிவசேனாவின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே, கூடுதலாக 2 நாள்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்ட கோரிக்கையையும் ஆளுநர் நிராகரித்தார். இதனால், மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஷிவசேனாவுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பும் பறிபோனது.

இந்நிலையில், ஷிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மருத்துவமனையில் இருந்தவாரே புகழ்பெற்ற மராத்தியக் கவிதை வரிகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் " கடலில் படகில் துடுப்பு போடுபவர்கள் அலைகள் குறித்து அச்சம் இருந்தால் கடலைத் தாண்டமாட்டார்கள். முயற்சி செய்யும் துணிவுள்ளவர்கள் தோற்கமாட்டார்கள். நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .