2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

100,000 றோகிஞ்சாக்கள் ஆபத்தில்

Editorial   / 2018 ஜனவரி 31 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் அகதி முகாம்களில் வசித்துவரும் றோகிஞ்சா அகதிகளில் 100,000க்கும் மேற்பட்டோர், மண்சரிவில் சிக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என, ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அறிக்கையொன்று தெரிவிக்கிறது. பங்களாதேஷில் பெய்யும் மத்திய ஆண்டுக்கான பருவமழைக் காலத்தின் போதே, இந்நிலை ஏற்படும் ஆபத்துக் காணப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. 

பங்களாதேஷின் கொக்ஸ் பஸார் பகுதியில், மியான்மாரின் ராக்கைன் மாநிலத்திலிருந்து தப்பிவந்த 900,000க்கும் மேற்பட்ட றோகிஞ்சா அகதிகள் காணப்படுகின்றனர். இவர்களுள் 688,000க்கும் மேற்பட்டவர்கள், கடந்தாண்டு ஓகஸ்டில் ஆரம்பித்த வன்முறைகளின் பின்னர் பங்களாதேஷை வந்தடைந்தவர்கள் ஆவர். இவர்களுள் சில நூறு இந்துக்களைத் தவிர, ஏனைய அனைவரும் முஸ்லிம்களாவர். 

இந்நிலையில், குறித்த பகுதிகளில் காணப்படும் மண்சரிவு, வெள்ள அபாயம் தொடர்பான சோதனைகளின் போத, 100,000க்கும் மேற்பட்ட மக்கள், கடுமையான ஆபத்தில் உள்ளனர் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது என, ஐ.நாவின் அவ்வறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள், அங்கிருந்து உடனடியாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டிய தேவையுள்ளது. 

இம்மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் பெரும்பான்மையான பகுதிகள், மனித வாழ்வுக்குப் பொருத்தமற்றவை எனக் குறிப்பிடும் ஐ.நா, அப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் ஏற்படக்கூடிய ஆபத்துக் காணப்படுகிறது எனத் தெரிவிக்கிறது. 

போதுமான இடவசதி இல்லாமை, பிரதான பிரச்சினையாகக் காணப்படுகிறது எனத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, இதன் காரணமாக, போதுமான வசதிகளை வழங்க முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டது. மேலதிகமாக, தொண்டை அழற்சி (டிப்தீரியா) போன்ற நோய்கள் உருவாகுவதற்கான ஆபத்துக் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. 

வாந்திபேதிக்கான தடுப்பூசி போடப்பட்டு, அந்நோயின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டாலும், தொண்டை அழற்சியின் காரணமாக இதுவரை 4,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 35 பேர் மரணமடைந்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .