2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’100 பேரைக் கொன்றேன்’: முன்னாள் தாதி ஒப்புக்கொண்டார்

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பராமரிப்பின் கீழ் காணப்பட்ட 100 நோயாளர்களைக் கொன்றதை, ஜேர்மனியைச் சேர்ந்த முன்னாள் தாதியொருவர், நேற்று முன்தினம் (30) ஒப்புக்கொண்டார். அவர் மீதான வழக்கு விசாரணைகளின் முதல் நாளிலேயே, அவர் இக்குற்றச்சாட்டை ஏற்றார்.

போருக்குப் பின்னரான ஜேர்மனியின் வரலாற்றில் இடம்பெற்ற, மோசமான தொடர் கொலைகளாக, தாதியாக இருந்த நியெல்ஸ் ஹோஜெலின் இக்கொலைகள் கருதப்படுகின்றன.

ஏனைய நோயாளர்கள் சிலரின் கொலைகள் தொடர்பில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நியெல்ஸ், ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகளாக, ஏற்கெனவே சிறையில் காணப்படுகிறார்.

ஆனால், மேலும் கொலைகளைப் புரிந்தார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் மீதான வழக்கு விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன.

தன் பராமரிப்பில் காணப்பட்ட நோயாளர்களுக்கு, வேண்டுமென்றே அதிகளவு மருந்தைக் கொடுத்து, அவர்கள் இறக்கும் நிலைமைக்குச் சென்ற பின்னர், அவர்களைக் காப்பாற்றுவதற்காக முயல்வதே, இவரின் நோக்கமெனக் கூறப்படுகிறது. ஆனால், இவரால் கொடுக்கப்பட்ட மருந்துகளால், நோயாளர்கள் இறந்திருந்தனர் என வெளிப்படுத்தப்பட்டது.

2000ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில், ஒல்டென்பேர்க் பகுதியில் வைத்து, ஆகக்குறைந்தது 36 நோயாளர்களை இவர் கொன்றதோடு, டெல்மென்ஹோர்ஸ்ட் வைத்தியசாலையில், மேலும் 64 நோயாளர்களை இவர் கொன்றாரெனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

வழக்கு விசாரணைகளின் போது, இவரால் கொல்லப்பட்டரெனக் கூறப்படும் 100 பேரின் விவரங்களையும், அரச வழக்குத் தொடுநர், பட்டியலிட்டு, ஒவ்வொரு பெயராக வாசித்தார். அதன் பின்னர், வழக்கைக் கொண்டுநடத்திய நீதிபதி, “உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் சரியானவையா?” எனக் கேட்டபோது, “ஆம்” என, சந்தேகநபர் பதிலளித்தார்.

இவரின் பார்வையின் கீழ் மரணித்த, 130 பேரின் உடல்கள், இந்த வழக்கு விசாரணைகளுக்காகத் தோண்டியெடுக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .