2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

110 பேர் உயிரிழந்தனர் என உறுதிப்படுத்தியது கியூபா

Editorial   / 2018 மே 21 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

  • மூன்று பேர் உயிர் தப்பினர்
  • பழைய விமானமெனத் தெரிவிப்பு
  • கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டது

கியூபாவின் தலைநகர் ஹவானாவிலிருந்து, கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட விமானமொன்று விபத்தைச் சந்தித்ததால், அதில் பயணித்த 113 பேரில் 110 பேர் பலியாகினர் என, கியூப அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது, கியூபாவில் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான விமான விபத்தாகப் பதிவாகியுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து, நேற்று முன்தினமும் நேற்றும், கியூபாவில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன.

விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளங்காண்பதற்கான முயற்சிகளில், அதிகாரிகள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், 15 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அதேபோல், தேடுதல்களின் போது, விமானிகள் அறையில் ஒலிப்பதிவுகளை மேற்கொள்ளும் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இன்னொரு கறுப்புப் பெட்டியான, விமானத்தின் தரவுகளைப் பதிவுசெய்யும் கறுப்புப் பெட்டியைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பயணித்த 113 பேரில், 107 பேர் பயணிகள் எனவும், 6 பேர் விமானிகள் உட்பட விமானப் பணியாளர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது. இதில், விமானப் பணியாளர்கள் 6 பேரும் கொல்லப்பட்டனர். பயணிகளில் 3 பேரே உயிர் தப்பினர். எனினும், ஆபத்தான நிலையிலேயே அவர்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றனர் என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியூபா மீது, ஐக்கிய அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் காரணமாக, புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதில், கியூபாவுக்குச் சிக்கல்கள் நிலவுகின்றன. இதனால், விமானங்களைக் குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்வதே, சாத்தியமானதாக அமைந்துள்ளது. இவ்வாறு குத்தகைக்குப் பெறும் விமானங்கள், பழைய விமானங்களாக உள்ளன எனவும், இதனாலேயே விபத்துகள் ஏற்படுகின்றன எனவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X