2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

18 எம்.எல்.ஏக்களின் விவகாரம்: இரு நீதியரசர்களும் மாறுபட்ட தீர்ப்பு

Editorial   / 2018 ஜூன் 15 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.டி.வி தினகரனுக்கு ஆதரவான சட்டசபை உறுப்பினர்களான (எம்.எல்.ஏ) தங்க.தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதனால் இந்த வழக்கு, மூன்றாவது நீதியரசரின் அமர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, 18 எம்.எல்.ஏக்கள், ஆளுநரிடம் கடந்தாண்டு கடிதம் கொடுத்தனர். அவர்களைத் தகுதி நீக்கம் செய்து, பேரவைத் தலைவர் ப.தனபால், கடந்தாண்டு செப்டெம்பர் 18ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்தே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதியரசர் இந்திரா பனர்ஜி, நீதியரசர் எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் எழுத்துபூர்வமான இறுதி வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து இவ்வாண்டு ஜனவரி 23ஆம் திகதி, இந்த வழக்கின் தீர்ப்பை, நீதியரசர்கள் திகதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நேற்றுப் பிற்பகல் 1.39க்கு, தீர்ப்பு வாசிக்கப்பட்டது. 6 நிமிடங்களில் தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது. இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு, தீர்ப்பை வாசிக்கும் நிலையில் முதலில் நீதியரசர் சுந்தர், தீர்ப்பை வாசித்தார். அவரது தீர்ப்பில், தகுதி நீக்கம் செய்யப்பட்டமை செல்லாது என்று தீர்ப்பளித்தார். தலைமை நீதியரசர் இந்திரா பனர்ஜி தனது தீர்ப்பில், தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தார். இரண்டு நீதியரசர்களும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், மூன்றாவது நீதியரசரசரின் விசாரணைக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .