2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘4 நாட்களில் 260 குர்திஷ் போராளிகள் பலி’

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவிலுள்ள குர்திஷ் போராளிகளுக்கு எதிராக, துருக்கியால் மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கையின் விளைவாக, நான்கு நாட்களில், 260 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர் என, துருக்கி இராணுவம் தெரிவிக்கிறது.

சிரியாவின் எல்லைப் பகுதி மாகாணமான அஃப்ரினின் மீது மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை, கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், நேற்று முன்தினம் (23) வரையிலான 4 நாட்களிலேயே, குர்திஷ் போராளிகளில் 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

விமானத் தாக்குதல்களாக ஆரம்பித்த இப்படை நடவடிக்கை, பின்னர் தரை வழியாகவும் மேற்கொள்ளப்பட்டது. இதில், துருக்கிப் படைகளுக்கு முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று, கடுமையான மேகங்கள் சூழப்பட்ட நிலை காணப்பட்டதன் காரணமாக, விமானத் தாக்குதல்கள் நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. ஆனால், துருக்கிப் படையினரும் துருக்கிக்கு ஆதரவான சிரியப் போராளிகளும், குர்திஷ்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தாக்குதல்களின் விளைவாக, 23 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. அத்தோடு, அஃப்ரினிலிருந்து தப்பியோடுவதற்கு, அப்பகுதி மக்கள் முயன்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அஃப்ரினிலிருந்து தப்பி, அலெப்போ நகரத்துக்கு அண்மையாக, குர்திஷ்களால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளுக்குச் செல்வதற்கு முயலும் மக்களை, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு விசுவாசமான படைகள் தடுத்து வருகின்றன என அறிவிக்கப்படுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிரான படை நடவடிக்கையில், குர்திஷ்களின் பங்களிப்பு முக்கியமானது என்பதால், இந்நடவடிக்கையை, ஐ.அமெரிக்கா தொடர்ந்தும் எதிர்த்து வருகிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவுக்கெதிரான படை நடவடிக்கையைக் குழப்புவது போன்று இந்நடவடிக்கை காணப்படுகிறது என, ஐ.அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மற்றிஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆதிக்கம், பெருமளவுக்கு இல்லாமல் போய்விட்டது என்று குறிப்பிடும் துருக்கி, குர்திஷ்களிடமிருந்து தான், மிகப்பெரிய அச்சுறுத்தல் காணப்படுகிறது என்றும் கூறுகிறது.

துருக்கியின் இந்த நடவடிக்கை, அஃப்ரினுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது என, துருக்கி தெரிவிக்கிறது. அலெப்போவிலுள்ள மன்பிஜ் நகரமும், குர்திஷ்களின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் நிலையில், அங்கிருந்தும் அவர்களை இல்லாமல் செய்யப் போவதாக, துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான் அறிவித்துள்ளார். எனவே, குறுகிய காலத்தில் இந்நடவடிக்கையை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக வழங்கிய முன்னைய உறுதிமொழி, சாத்தியமில்லாமல் போகுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .