2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அ.இ.அ.தி.மு.கவில் இணைகிறார் ரஜினிகாந்த்?

Editorial   / 2018 ஜூலை 24 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த், தமிழகத்தின் ஆளுங்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படுமென, தமிழக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அரசியலுக்கு வருவதாக, நடிகர் ரஜினிகாந்த் விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, யாருடன் கூட்டணி அமைத்துக் கொள்வார் என்பதில், தொடர்ச்சியாகச் சந்தேகம் நிலவியது. குறிப்பாக, “கட்டமைப்புச் சரியில்லை” என்ற வார்த்தைகளுடனேயே தனது அறிவிப்பை அவர் விடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் ஏற்கெனவே பிரதான கட்சிகளான அ.தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் அவர் கூட்டணி வைத்துக் கொள்வாரா என்ற சந்தேகம் காணப்பட்டது. 

மறுபக்கமாக, தனது அரசியல், “ஆன்மிக அரசியல்” என அவர் வர்ணித்ததைத் தொடர்ந்து, மதசார்பற்ற அரசியலை முன்னெடுக்கும் தி.மு.கவுடன் அவரால் இணைய முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. 

அதேபோல், மத்தியில் ஆளும் இந்துத்துவா கட்சியான பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் இணையக்கூடுமெனக் கருதப்பட்டது. குறிப்பாக, பா.ஜ.கவின் பல கொள்கைகளை, ரஜினிகாந்த் பின்பற்றுகிறார் என்று கருதப்பட்டது.  

இந்நிலையில் தான், அ.தி.மு.கவுடன் இணைவதற்கான அழைப்பு, ரஜினிகாந்த்துக்கு விடுக்கப்பட்டுள்ளது எனவும், அவ்வாறு அவர் அழைப்பை ஏற்றால், அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்கக்கூடுமெனவும், தேர்தல் வரும்போது, பா.ஜ.கவுடன் இணைந்து அவர் போட்டியிடுவார் எனவும், தமிழக அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

பா.ஜ.கவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட தமிழகத்தில், அக்கட்சியின் கிளை போன்றே அ.தி.மு.க செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் காணப்படுகின்ற நிலையில், தற்போது இத்தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X