2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அஃப்ரினில் தாக்குதல்களை தீவிரப்படுத்துகிறது துருக்கி

Editorial   / 2018 மார்ச் 16 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி எல்லையில் அமைந்துள்ள அஃப்ரின் மீதான தமது தாக்குதல்களை, துருக்கி நேற்று முன்தினம் (14) தீவிரப்படுத்தியுள்ளது. குர்திஷ்களால் கட்டுப்படுத்தப்படும் இப்பகுதி மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, குர்திஷ்களுக்கு ஆதரவாக அப்பகுதிக்குச் சென்ற, சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவான ஆயுததாரிகள் மீதே, இத்தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டா பகுதி மீது, சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு ஆதரவான படைகள், கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்தும் மேற்கொண்டு, பாரிய இழப்புகளை ஏற்படுத்திவரும் நிலையிலேயே, அஃப்ரினில் இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பகுதியில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், 25 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஃப்ரின் மீதான துருக்கியில் தாக்குதல்களில் ஏற்படும் இழப்புகள் தொடர்பான உத்தியோகபூர்வமான தகவல்கள், கிழக்கு கூட்டா அளவுக்கு வெளியிடப்படுவதில்லை என்ற அடிப்படையில், உண்மையான இழப்புகள் குறித்துத் தெரியவரவில்லை.

ஆனால், ஜனவரி 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்தாக்குதல்களின் விளைவாக, குர்திஷ்களுக்கு அதிகளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, துருக்கிப் படைகளுக்குச் சிறப்பான முன்னேற்றம் கிடைத்துள்ளது. ஆனால், அஃப்ரின் பிராந்தியம், நேற்று முன்தினத்துக்குள் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என, துருக்கி ஜனாதிபதி றிசெப் தய்யீப் ஏர்டோவான் வெளியிட்ட எதிர்பார்ப்பு, பூர்த்தியாகியிருக்கவில்லை.

இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில், அஃப்ரின் பிராந்தியத்தின் சுமார் 70 சதவீதமான பகுதி, துருக்கியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .