2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அகதிகள் விவகாரத்தில் சிந்தித்துச் செயற்படுமாறு கோருகிறது ஐ.நா

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மாரிலிருந்து பங்களாதேஷுக்கு வந்த அகதிகளை, மீண்டும் மியான்மாருக்குத் திருப்பி அனுப்பும் திட்டம் தொடர்பாக மீளச் சிந்திக்குமாறு, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவராண்மை கோரியுள்ளது. மியான்மாரின் காணப்படும் பாதுகாப்பு நிலைமை தொடர்பாகக் கேள்விகள் எழுந்துள்ள நிலையிலேயே, இக்கோரிக்கையை, அகதிகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகராலயம் (யு.என்.எச்.சி.ஆர்) விடுத்துள்ளது.

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக, பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்து வந்த றோகிஞ்சா முஸ்லிம்களை, மியான்மாருக்கு மீள அனுப்பும் திட்டத்தில், பங்களாதேஷும் மியான்மாரும், அண்மையில் கைச்சாத்திட்டிருந்தன. இந்த நடவடிக்கை, கடந்த செவ்வாய்க்கிழமையே ஆரம்பிக்கவிருந்த போதிலும், பங்களாதேஷ் தரப்புத் தயாராக இல்லாத காரணத்தால், பிற்போடப்பட்டுள்ளது.

திருப்பி அனுப்பும் இந்நடவடிக்கை தொடர்பாக, ஆரம்பத்திலிருந்தே தனது கவனத்தைச் செலுத்திவந்த யு.என்.எச்.சி.ஆர், தனது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்தியுள்ளது.

மீளத் திருப்பி அனுப்புதல் சிறப்பாக இடம்பெற வேண்டுமாயின், மியான்மாரில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு காணப்பட்டாலேயே, அது நிலைத்திருக்கும் ஒன்றாக மாறுமெனவும், அம்முகவராண்மை தெரிவித்துள்ளது. முக்கியமாக, றோகிஞ்சா முஸ்லிம்களை, மியான்மாரின் பிரஜைகளாக ஏற்பதற்கு, அந்நாடு இன்னமும் மறுத்து வரும் நிலையில், அப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென, யு.என்.எச்.சி.ஆர் வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், ராக்கைனுக்குத் திரும்புபவர்களைக் கண்காணிப்பதற்காக, கண்காணிப்புப் பொறிமுறையொன்று காணப்பட வேண்டுமெனவும், அது வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், யு.என்.எச்.சி.ஆருக்கு அவ்வாய்ப்புக் காணப்படவில்லை எனவும் அது குறித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X