2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அணுவாயுத ஒப்பந்தம் தொடர்பில் நிபந்தனைகளை முன்வைக்கிறது ஈரான்

Editorial   / 2018 மே 25 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட, ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்தில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு, நிபந்தனைகள் சிலவற்றை, ஈரான் விதித்துள்ளது. இவ்வொப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு ஐ.அமெரிக்கா எடுத்த முடிவைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே, இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்வொப்பந்தத்தின்படி, தனது அணுவாயுத நடவடிக்கைகளை ஈரான் நிறுத்தி வைப்பதோடு, அதற்குப் பதிலாக, ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், ஐ.அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததோடு, ஈரான் மீதான தடைகளை மீள விதிப்பதாகவும் அறிவித்தது. இதனால், இவ்வொப்பந்தத்தைத் தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருப்பதற்கு, ஐரோப்பிய நாடுகள் முயன்று வருகின்றன.

இந்நிலையிலேயே, தமது எண்ணெய் விற்பனையைப் பாதுகாத்தல், தமது நாட்டு வர்த்தகத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை, ஈரான் இப்போது முன்வைத்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை விடுத்த ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானி, தமது எண்ணெய் வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்காக, ஈரானின் மசகு எண்ணெயை, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் கொள்வனவு செய்ய வேண்டுமெனவும், ஈரானுடனான வர்த்தகத்தை, ஐரோப்பிய வங்கிகள் பாதுகாக்க வேண்டுமெனவும் கோரினார்.

அதேபோல், ஈரானின் ஏவுகணைத் திட்டமே, அண்மையில் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான பேரம்பேசல்களுக்கு, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் முயலக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிபந்தனைகளை ஏற்காவிட்டால், யுரேனியம் செறிவாக்கல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்த அவர், ஐ.அமெரிக்காவுடன் இனிமேல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி றௌஹானியின் இந்நிபந்தனைகள், பேரம்பேசும் மேசையில், வலுவான நிலைமையை ஈரான் அடைந்துள்ளமையைக் காட்டுவதாக அமைகிறது எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .