2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அணுவாயுத யுத்தத்துக்கு வடகொரியா எச்சரிக்கை

Editorial   / 2018 மே 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள சந்திப்புத் தொடர்பாக, ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்த கருத்துகளுக்கு, வடகொரியா தன்னுடைய விமர்சனங்களை வெளிப்படுத்தியுள்ளதோடு, அணுவாயுத யுத்தத்தை மேற்கொள்ள வேண்டியேற்படலாம் எனவும் எச்சரித்துள்ளது.

இச்சந்திப்பிலிருந்து விலக வேண்டியிருக்கும் என வடகொரியா விடுத்த எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்திருந்த மைக் பென்ஸ், வடகொரியாவுக்கு எச்சரிக்கையை வழங்கி, ஜனாதிபதி ட்ரம்ப்பை ஏமாற்ற முயன்றால் அது பெரும் தவறாக அமையுமெனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோன்று, ஐ.அமெரிக்காவுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தாவிட்டால், லிபியா போன்று வடகொரியா மாறிவிடுமெனவும் எச்சரித்திருந்தார். லிபியாவின் சர்வாதிகாரத் தலைவர் முஹம்மர் கடாபி, நேட்டோ படைகளின் படையெடுப்பின் விளைவாக, உள்நாட்டு ஆயுததாரிகளால் கொல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வடகொரியாவின் வெளிநாட்டு உப அமைச்சர் சோ சொன் ஹூய்-ஐ மேற்கோள்காட்டிச் செய்தி வெளியிட்டுள்ள வடகொரிய அரச ஊடகம், “ஐ.அமெரிக்காவின் உப ஜனாதிபதியின் வாயிலிருந்து, அவ்வாறான அறிவற்ற, முட்டாள்தனமான கருத்துகள் வெளிவருவதைக் கண்டு ஆச்சரியமடையவில்லை” என அவர் கூறினாரெனத் தெரிவித்தது.

அத்தோடு, இவ்வாறான எச்சரிக்கையை, ஐ.அமெரிக்கா தொடர்ந்தும் முன்வைத்து வருமாயின், இச்சந்திப்பை இரத்துச் செய்யுமாறு, தமது நாட்டின் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்குப் பரிந்துரைக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, ஐ.அமெரிக்கா மீதான அணுவாயுதத் தாக்குதல் எச்சரிக்கையையும் அவர் மன்வைத்தார். “சந்திப்பு அறையிலா அல்லது அணுவாயுதம் மீதான அணுவாயுத மோதலிலா ஐ.அமெரிக்காவை நாம் சந்திக்கவுள்ளோம் என்பது, ஐ.அமெரிக்காவின் முடிவிலும் அதன் நடத்தையிலுமே தங்கியுள்ளது” என, அவர் எச்சரித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு, எதிர்வரும் 12ஆம் திகதி, சிங்கப்பூரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X