2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அணுவாயுதத்தைக் கைவிட்டால் வடகொரியாவின் தடைகள் நீக்கப்படும்’

Editorial   / 2018 மே 15 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா, தனது அணுவாயுத நிகழ்ச்சித் திட்டத்தை முழுமையாகக் கைவிடச் சம்மதிக்குமாயின், அந்நாடு மீதான தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த, ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, அப்படியான நிலைமையில் வடகொரியாவில் ஏற்படும் பொருளாதாரச் செழிப்பு, தென்கொரியாவுக்குச் சவாலை வழங்குவதாக அமையுமெனவும் குறிப்பிட்டார்.

ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், எதிர்வரும் ஜூன் 12ஆம் திகதி, சிங்கப்பூரில் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் குறித்த கவனம் எழுந்துள்ளது.

வடகொரியாவை அபிவிருத்தி செய்வதற்கு, ஐ.அமெரிக்க மக்களின் வரிப் பணத்தை முதலிடுவதற்கு, ஐ.அமெரிக்கா தயாராக இருக்காது எனக் குறிப்பிட்ட பொம்பயோ, ஆனால், தடைகளை நீக்கி, ஐ.அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் முதலிடுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு முன்னதாக, மே 23 தொடக்கம் 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தமது நாட்டின் அணுவாயுதச் சோதனைத் தளத்தை அழிக்கவுள்ளதாக, வடகொரியா ஏற்கெனவே உறுதியளித்திருந்த நிலையில், அச்செய்தியை, பொம்பயோ வரவேற்றார். அவ்வாறு அழிக்கப்படுவது, ஐ.அமெரிக்காவுக்கும் உலகுக்கும் நல்ல செய்தியெனவும் அவர் குறிப்பிட்டார்.

வடகொரியத் தலைவரை, இரண்டு தடவைகள் சந்தித்துள்ள பொம்பயோ, ஐ.அமெரிக்க - வடகொரிய உறவில், முக்கியமான ஒரு நபராக மாறியுள்ளார். வடகொரியாவால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஐ.அமெரிக்கர்கள் மூவரை, அவரது இரண்டாவது விஜயத்தின் போது, ஐ.அமெரிக்காவுக்கு அவர் மீளவும் அழைத்து வந்திருந்தார்.

இந்நிலையில், வடகொரியா மீதான தடைகளை நீக்குவதற்குத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளமை, முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

ஆனால் மறுபக்கமாக, இதே மாதிரியான ஓர் ஒப்பந்தமே, ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்குமிடையில் காணப்பட்ட நிலையில், அதிலிருந்து வெளியேறும் முடிவை, ஐ.அமெரிக்கா அண்மையில் எடுத்திருந்த நிலையில், வடகொரியா மீதான தடைகளை மாத்திரம் நீக்குவதாகக் கூறுவது, இவ்வரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது என, விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .