2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அணை தகர்ந்ததையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலின் புரூமடின்ஹோ நகரத்திலுள்ள வேல் எஸ்.ஏ நிறுவனத்தின் கொரெகோ டோ பெஜியாவோ நிலக்கரிச் சுரங்கத்திலுள்ள அணையொன்று தகர்ந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக நேற்று  அதிகரித்துள்ளதுடன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயங்கரமான நிலச்சரிவொன்றைத் தொடர்ந்தே அணை வெடித்ததில் நூற்றுக்கணக்கானோரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவும் மீட்புப் பணியாளர்கள் தேடுதல்களை நடத்தியிருந்தனர்.

இந்த அணை தகர்ந்ததில் புரூமடின்ஹோ நகரத்திலுள்ள நிலக்கரிச்சுரங்க வசதிகள், அருகிலுள்ள வீடுகள் உள்ளிட்டன புதையுண்டுள்ளன. 300க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பெரும்பாலானவர்கள் இறந்ததாகவே கருதப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

என்ன காரணத்தால் அணை தகர்ந்தனெ இன்னும் தெளிவில்லாத நிலையே காணப்படுகின்ற நிலையில், அணை மீதான அண்மைய பரிசோதனைகள் எதுவித பிரச்சினையையும் வெளிக்காட்டவில்லையென பரிசோதனைகளை மேற்கொண்ட ஜேர்மனிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த பேரழிவுக்கு வேல் எஸ்.ஏ நிறுவனத்தைச் சாடியுள்ள புரூமடின்ஹோ நகர மேயர் அவிமர் டி மெலோ பார்செலோஸ், 26.5 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நிபுணர்களின் பாதுகாப்பு பரிந்துரைகளை தமது நிறுவனம் தொடர்ந்தபோதும் அனர்த்தம் நிகழ்ந்ததாக தொலைக்காட்சி நேர்காணலொன்றில் வேல் எஸ்.ஏ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி பையோ ஸ்வார்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், வேல் எஸ்.ஏ நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, அணை தகர்ந்தமைக்கான காரணங்களைக் கண்டறியவும் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், நேற்று அதிகாலைக்கு முன்னர் புரூமடின்ஹோ நகரத்தில் வெளியேறும் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் இன்னொரு அணை தகர்ந்துவிட்டதோ என அச்சம் ஏற்பட்டிருந்தபோதும் நேற்று பிற்பகலில் வெளியேறுவதை சிவில் பாதுகாப்பு நிறுத்தியிருந்தனர்.

இந்த அனர்த்தத்தால் மொத்தமாக 24,000 பேர் பாதிக்கப்பட்டதாக மாநில தீயணைப்பு திணைக்களத்தின் பேச்சாளர் பெட்ரோ அய்ஹரா தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X