2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அத்வானி, ஜோஷியுடன் அமித் ஷா திடீர் சந்திப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷியை, அவர்களின் இல்லத்துக்குச் சென்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் அதிருப்தியுடன் சில கருத்துக்களை அத்வானி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபைக்கான தேர்தல் நாளை முதல் அடுத்த மாதம் 19ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளநிலையில், நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள அத்வானி ஆறு முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான அமித் ஷா இம்முறை போட்டியிடுகிறார்.

அந்தவகையில், எல்.கே. அத்வானி, நாடாளுமன்ற உறுப்பினரான முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு வயது மூப்பு காரணமாக இம்முறை தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனால், இரண்டு பேரும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பாரதிய ஜனதாக் நிறுவப்பட்ட நாள் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. அன்று தனது பேஸ்புக் பக்கத்தில், "பாரதிய ஜனதாக் கட்சி தான் கடந்து வந்த பாதையை பின்நோக்கி பார்க்க வேண்டும். அதுபோல எதிர்காலத்தை பற்றிய சிந்தனையும், சுயபரிசோதனையும் பாரதிய ஜனதாக் கட்சிக்குத் தேவை. முதலில் நாடு, பிறகு கட்சி, கடைசியாகத்தான் தன்னலம் என்ற கொள்கையைத்தான் நான் அனைத்து சூழ்நிலைகளிலும் கடைபிடிக்க முயற்சி செய்தேன். இனியும் செய்வேன்.

இந்திய ஜனநாயகத்தின் சாராம்சம் என்பது பன்முகத்தன்மையை மதித்தல், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை ஆகும். தொடக்கத்திலிருந்தே பாரதிய ஜனதாக் கட்சி அரசியல் ரீதியான எதிரிகளை விரோதிகளாகப் பார்த்ததில்லை. மாற்றுக் கருத்துடையவர்களை தேசவிரோதிகளாக நினைத்ததில்லை. ஒவ்வொரு குடிமகனின் அரசியல், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு பாரதிய ஜனதாக் கட்சி எப்போதும் மதிப்பளித்துள்ளது” என்று அத்வானி தெரிவித்திருந்தார்.

அத்வானியின் இக்கருத்துக்கள் பாரதிய ஜனதாக் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அதேசமயம், எதிர்க்கட்சிகளும் மூத்த தலைவர்களை பாரதிய ஜனதாக் கட்சி மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டியது.

இந்நிலையிலேயே, முரளிமனோகர் ஜோஷி, எல்.கே. அத்வானி இல்லத்துக்கு அமித் ஷா நேற்று முன்தினம் சென்று அவர்களைச் சந்தித்தார். அப்போது, கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்கிற விஷயத்தை அவர்களிடம் அமித் ஷா எடுத்துக்கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதாக் கட்சி தலைமை சார்பில் இச்சந்திப்புக் குறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X