2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அமித் ஷாவின் பேச்சுக்கு பங்களாதேஷ் கண்டனம்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் வசிக்கும் பங்களாதேஷ் நாட்டவர்கள் தொடர்பில், இந்திய ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு, பங்களாதேஷ், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. 

இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவு தொடர்பாகப் பேசுவதற்கு, ஷாவுக்குத் தகுதி கிடையாது என, பங்களாதேஷின் தகவல்துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனு தெரிவித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்த ஷா, பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள், இந்தியாவுக்குள் புகுந்திருக்கிறார்கள் எனவும், “இவ்வாறு புகுந்தவர்கள், கறையான்கள் போல எமது நாட்டைத் தின்றிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர், நேற்று முன்தினம், டெல்லியில் உரையாற்றிய ஷா, அதே கருத்தை மீண்டும் வெளிப்படுத்தியதோடு, “கறையான்களை வெளியேற்றுவோம்” எனத் தெரிவித்திருந்தோம். 

இந்திய அரசியலில், பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறகு, அதிக பலம் கொண்டவராகக் கருதப்படும் ஷாவின் கருத்து, இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பங்களாதேஷ் தரப்பிலும், இது தொடர்பில் எதிர்ப்புப் பதிவாகியுள்ளது. 

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய - பங்களாதேஷ் உறவு தொடர்பாக ஏற்கெனவே தங்களுடன் உரையாடியுள்ளார் எனத் தெரிவித்த பங்களாதேஷ் அமைச்சர் ஹஸனுல், அஸாமின் பிரஜைகள் பதிவின் போது உள்ளடக்கப்படாமல் போன மக்கள், மீண்டும் பங்களாதேஷுக்குத் திருப்பியனுப்பப்பட மாட்டார்கள் என, அவர் உறுதி வழங்கியுள்ளார் எனவும் குறிப்பிட்டார். 

“பங்களாதேஷைச் சேர்ந்தவர்களை, கறையான் என வர்ணித்து, அமித் ஷா, தேவையற்ற கருத்தொன்றை வெளிப்படுத்தியுள்ளார். அவரது கருத்து, இந்தியாவின் உத்தியோகபூர்வக் கருத்தாக அமையாது என்பதால், அவரது கருத்துக்கு, டாக்காவிலுள்ள நாம், எந்தவித முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை” என, அமைச்சர் ஹஸனுல், மேலும் குறிப்பிட்டார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .