2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமெரிக்கத் தாக்குதலில் 42 பொதுமக்கள் பலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிரிய நகரமான றக்காவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் இலக்குகள் மீது, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதல்களில், குறைந்தது 42 பொதுமக்கள், நேற்று முன்தினம் (21) கொல்லப்பட்டனர் என, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், நேற்று (22) தெரிவித்தது.

நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள், பொதுமக்களின் பல குடியிருப்புகள் மீது வீழ்ந்ததாகத் தெரிவித்த இக்குழு, கொல்லப்பட்டவர்களில் 19 சிறுவர்களும் 12 பெண்களும் உள்ளடங்குகின்றனர் எனத் தெரிவித்தது.

ஏற்கெனவே, கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சிக்கி, குறைந்தது 27 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதல்களின் விளைவாக, ஓகஸ்ட் 14ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான 8 நாட்கள் கொண்ட காலப்பகுதியில், ஐ.அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் தாக்குதல்களால், குறைந்தது 167 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் றமி அப்டெல் ரஹ்மான், "இப்பிரதேசங்களில், பொதுமக்கள் செறிவாக வாழும் இடங்களின் மீதே விமானத் தாக்குதல்கள் இடம்பெறுவதன் காரணமாக, உயிரிழப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

"முன்னரங்க நிலைமைகளிலிருந்து தப்பியோட எதிர்பார்க்கும் ஏராளமான பொதுமக்களை, இந்தக் கட்டடங்கள் கொண்டிருக்கின்றன.

"ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் நகர்வுகள் எங்கு காணப்பட்டாலும், அந்தக் கட்டடங்களை, ஐ.அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, இலக்கு வைக்கிறது" என்று குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி, இந்த நகரத்தில், 25,000 வரையிலான பொதுமக்கள் காணப்படுகின்றனர். இம்மக்களுக்கான உணவு, எரிபொருள் விநியோகங்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படுவதுடன், அவை அதிக விலையுடைனவாகவும் காணப்படுகின்றன என, மேலும் தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவுக்கான ஐ.நா மனிதாபிமான அதிகாரி ஜே இகேலான்டின் கருத்துப்படி, றக்கா நகரத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவால் கட்டுப்படுத்தப்படும் பகுதியே, நாட்டில் மிகவும் மோசமான பகுதியாகக் காணப்படுகிறது.

ஐ.அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, சிரியாவிலும் ஈராக்கிலும் செயற்படுவதோடு, பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு, அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகத் தெரிவிக்கிறது. சிரியாவிலும் ஈராக்கிலும், 2014ஆம் ஆண்டிலிருந்து இம்மாதம் வரை, தமது தாக்குதல்களால் 624 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அந்தக் கூட்டணி ஏற்றுக் கொள்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கை, மிக அதிகமானது என, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .