2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியல் குழப்பங்கள்: ‘தீர்மானகரமானது இம்மாதம்’

Editorial   / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற தீர்மானகரமான மாதமாக, இம்மாதமே அமையுமென, அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தன்னை அறிவித்துள்ள குவான் குவைடோ தெரிவித்துள்ளார். நிக்கொலஸ் மதுரோவும் குவைன் குவைடோவும், ஜனாதிபதிப் பதவிக்காகப் போராடும் நிலையில், இரு தரப்புகளும் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இடைக்கால ஜனாதிபதியாகத் தன்னை அறிவித்த பின்னர், மதுரோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு, குவைடோ கோரிவருகிறார். இதே கோரிக்கையை நேற்று முன்தினம் (03) இடம்பெற்ற போராட்டத்தின் போதும் அவர் முன்வைத்தார்.

அவருடைய தரப்புக்கான முக்கிய ஊக்குவிப்பாக, விமானப் படையின் ஜெனரல் ஒருவர், மதுரோவை விட்டு, தனது ஆதரவை குவைடோவுக்கு வழங்கினார். மதுரோவைப் பதவியிலிருந்து அகற்றுவதாக இருந்தால், பாதுகாப்புப் படையினரின் ஆதரவு தேவையென்பதை ஏற்றுக்கொண்டிருந்த குவைடோவுக்கு ஆதரவு வழங்கிய உயர்நிலை அதிகாரியாக இவர் அமைந்துள்ளார்.

குவைடோவினதும் அவருக்கு ஆதரவளிக்கும் மேற்கத்தேய நாடுகளினதும் பிரதான கோரிக்கையாக, ஜனாதிபதித் தேர்தலை மீள நடத்த வேண்டுமென்பதே காணப்படுகிறது.

எனினும், தனக்கெதிரான ஆர்ப்பாட்டங்களுக்குப் பதிலளித்து, தன் சார்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்ட மதுரோ, அக்கோரிக்கையை நிராகரித்தார். மாறாக, எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் நாடாளுமன்றத்துக்கான தேர்தலை நடத்துவதற்காக முன்வருவதாகத் தெரிவித்தார்.

சுமார் 6 மாதங்களுக்கு முன்னர், மதுரோ மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சிக்குப் பின்னர் பொது நிகழ்வொன்றில் முதன்முறையாகக் கலந்துகொண்ட அவர், தனக்கெதிராக இடம்பெறுவது அரசியல் சதியெனவும், அதில், ஐக்கிய அமெரிக்காவின் கைப்பொம்மையாக குவைடோ உள்ளாரெனவும் தெரிவித்தார்.

இராணுவத்தில் பெரும்பான்மையான உயரதிகாரிகளின் ஆதரவு, மதுரோவுக்கே காணப்படும் நிலையில், விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள அவர் தயாராக இல்லையென்பதையே அவரின் கருத்துகள் தெரிவிக்கின்றன. ஆனால், விமானப்படை ஜெனரலின் ஆதரவு மாற்றம், ஏனைய அதிகாரிகளையும் அவ்வாறு செய்யத் தூண்டுமாயின், இம்மாதத்துக்குள் இப்பிரச்சினைக்கான முடிவு கிடைக்கும் வாய்ப்புக் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .