2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆப்கானில் மேலும் அதிக படைகள் அறிவித்தார் ட்ரம்ப்

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்தோடு, ஐ.அமெரிக்காவின் நேச நாடான பாகிஸ்தான் மீதும், கடுமையான விமர்சனங்களை, அவர் முன்வைத்தார்.

நாட்டின் ஜனாதிபதி என்ற அடிப்படையில், முப்படைத் தளபதியாகவும் உள்ள ஜனாதிபதி ட்ரம்ப், முதன்முறையாக, முப்படைத் தளபதியாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதற்கு முன்னர் பல தடவைகள், ஆப்கானிஸ்தான் போரை விமர்சித்த ஜனாதிபதி ட்ரம்ப், அங்கிருந்து ஐ.அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமெனத் தொடர்ச்சியாகக் கோரி வந்தார்.

ஆப்கானிஸ்தான் போரில் செலவிடப்படும் பணத்தை, வீணாக்கப்படும் பணம் எனத் தெரிவித்துவந்த அவர், அப்பணத்தை, ஐ.அமெரிக்காவின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த வேண்டுமெனவும் கோரி வந்தார்.

எனினும், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை ஆற்றிய உரையில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், "ஓவல் அலுவலகத்தின் மேசைக்குப் பின்னிருந்து சிந்திக்கும் போது, நிலைமை வித்தியாசமாகத் தெரிந்தது" என்று ஏற்றுக் கொண்டார். தன்னுடைய முதல் எண்ணம், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என்பதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். ஓவல் அலுவலகம் என்பது, வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியின் அலுவலகத்தைக் குறிக்கும் இடமாகும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து படையினரை உடனடியாக விலக்குவது, வெற்றிடமொன்றை ஏற்படுத்தி, பயங்கரவாத அமைப்புகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும் என, அவர் குறிப்பிட்டார்.

ஆயிரக்கணக்கான புதிய படையினரை அங்கு அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்த போதிலும், உண்மையான எண்ணிக்கையை வெளியிட மறுத்துவிட்டார். ஆனால், வெள்ளை மாளிகை அதிகாரிகளின் தகவலின்படி, ஆப்கானிஸ்தானில் மேலும் 3,900 படையினரை அனுப்புவதற்கு, பாதுகாப்புச் செயலாளருக்கு, ஜனாதிபதி ட்ரம்ப், ஏற்கெனவே அனுமதியளித்து விட்டார் என்று குறிப்பிட்டனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் ஆயுத ரீதியான மோதல் முடிவடைந்த பின்னர், தலிபான் உள்ளிட்ட அமைப்புகளுடன் அரசியல் தீர்வொன்றுக்குக்கான வாய்ப்பும் ஏற்படக்கூடும் என்று தெரிவித்த அவர், "அது நடக்குமா அல்லது எப்போது நடக்கும் என்பது பற்றி, யாருக்கும் தெரியாது" என்றும் குறிப்பிட்டார்.

மிக முக்கியமான உரையாக அமைந்த இந்த உரை தொடர்பில், அண்மைக்காலமாக ஆதரவை இழந்துவரும் ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு, ஓரளவு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட உரையை ஆற்றினார் என்பதால், ஜனாதிபதியின் வழக்கமான ஆக்ரோஷக் கருத்துகளைக் காண முடிந்திருக்கவில்லை.

ஆனால், அவரது உரையில், மேலோட்டமான போக்கு ஒன்று காணப்பட்டதே தவிர, விரிவான தகவல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அத்தோடு, ஆப்கானிஸ்தானில் படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்பது, அங்கு மேலும் உயிரிழப்புகளை அதிகரிக்கும் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் 100,000 ஐ.அமெரிக்கப் படையினர் காணப்பட்டனர். இன்று, 8,400 படையினர் மாத்திரமே காணப்படுகின்றனர். ஆனால், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை, இன்னமும் ஆபத்தான ஒன்றாகவே கருதப்படுகிறது. இவ்வாண்டு மாத்திரம், ஆப்கானிஸ்தானின் பொலிஸ், இராணுவத்தைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்டோர், அங்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தானுக்குக் குட்டு

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உரை, ஆப்கானிஸ்தானையே முக்கியமானதாகக் கொண்டிருந்தாலும், பாகிஸ்தான் மீதும் முக்கியமான கவனம் செலுத்தப்பட்டது.

ஐ.அமெரிக்காவின் நேச நாடாக பாகிஸ்தான் இருக்கின்ற போதிலும், அந்நாட்டுடனான உறவு, அண்மைக்காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், "பாகிஸ்தானுக்கு, பல பில்லியன்கணக்கான டொலர்களை வழங்கி வருகிறோம்.  ஆனால் அதே நேரத்தில், நாங்கள் எதிர்த்துப் போராடுகின்ற அதே பயங்கரவாதிகளை, அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்" என்று குறிப்பிட்டார்.

இவ்வாறான நிலைமை தொடருமாயின், முக்கியமான உதவிகள் நிறுத்தப்படும் என்று எச்சரித்த அவர், பாகிஸ்தான் மாற்றமடைய வேண்டும் எனவும், அந்த மாற்றம், உடனடியாக ஏற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இந்த உரை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனியிங், "பாகிஸ்தானின் பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகளை, சர்வதேச சமூகம் முழுமையாக அடையாளம் காண வேண்டுமென நாம் நம்புகிறோம்" என்று தெரிவித்ததோடு, பாகிஸ்தானும் சீனாவும், எல்லா நேரங்களிலும் நட்பாக இருக்கும் நாடுகள் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .