2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆயுததாரிகளுடனான மோதலில் 16 பொலிஸார் பலி

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்தின் சினாய் குடாநாட்டில், மேற்குப் பகுதிப் பாலைவனப் பகுதியில், கெய்ரோவுக்கும் பஹாரியாவுக்கும் இடையிலான வீதியில், பொலிஸாருக்கும் ஆயுததாரிகளுக்கும் இடையிலான மோதலில், 16 பொலிஸார் கொல்லப்பட்டனர் என, எகிப்திய உள்விவகார அமைச்சுத் தெரிவித்தது.

உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகள், நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இடம்பெற்றன. அவர்களுக்கான அரச மரியாதை வழங்கப்பட்டு, அவர்களது சடலங்கள் அடங்கிய பெட்டிகள், எகிப்திய தேசியக் கொடிகளால் சுற்றப்பட்டிருந்தன.

இத்தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர் என, உள்விவகார அமைச்சுத் தெரிவித்தாலும், அதற்கு முன்னர் கருத்துத் தெரிவித்த பாதுகாப்புத் தரப்பினரும் மருத்துவத் தகவல் மூலங்களும், குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர் எனக் கூறியிருந்தன. எனவே, கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்த இம்மோதல்களில், உண்மையில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல், குழப்பகரமானதாகவே காணப்படுகிறது.

தலைநகர் கெய்ரோவிலிருந்து 200 கிலோமீற்றரிலும் குறைவான பகுதியில், தென்மேற்குப் பகுதியில், ஆயுததாரிகள் மறைந்திருப்பதோடு, பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர் எனவும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிடுகின்றனர் எனவும் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே, பொலிஸார் அங்கு அனுப்பப்பட்டனர்.

அப்பகுதிக்கு பொலிஸார் சென்ற பின்னர், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தினர். பல மணிநேரங்கள் நீடித்த இந்த மோதல்களின் விளைவாக, கொல்லப்பட்ட 16 பேருக்கு மேலதிகமாக, 13 பொலிஸார் காயமடைந்தனர் எனத் தெரிவித்த உள்விவகார அமைச்சு, ஒருவரை இன்னும் காணவில்லை என்றும் அறிவித்தது.

இம்மோதலின் விளைவாக, ஆயுததாரிகள் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவித்த அமைச்சு, ஆயுததாரிகள் துரத்தியடிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .