2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இடாய் சூறாவளியால் 157 பேர் கொல்லப்பட்டனர்

Editorial   / 2019 மார்ச் 19 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வே, அதன் அயல் நாடான மொஸாம்பிக்கைத் தாக்கிய இடாய் சூறாவளியை அடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளங்கள், வேகமான காற்றுக்களால் இரண்டு நாடுகளிலும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 157 ஆக நேற்று (18) உயர்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் தாக்கிய சூறாவளியைத் தொடர்ந்து சிம்பாப்வேயில் 89 பேரும், மொஸாம்பிக்கில் 68 பேரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், மொஸாம்பிய நகரான பெய்ராவில் மாத்திரம் 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெய்ராவைத் தாக்கிய சூறாவளி இடாயால் ஏற்படுத்தப்பட்ட சேதம் பாரியது, அதிர்ச்சியானது என அறிக்கையொன்றில் நேற்று தெரிவித்த செஞ்சிலுவை, செம்பிறை சமூகங்களில் சர்வதேச சம்மேளனம், பெய்ராவையும் அதனைச் சுற்றியுள்ள 90 சதவீதமான பகுதிகள் சேதமடைந்துள்ளது அல்லது அழிவடைந்துள்ளது எனக் கூறியுள்ளது. இதுதவிர, 530,000 பேரைக் கொண்ட பெய்ராவுக்கான இறுதி வீதியும், நேற்று முன்தின அணை வெடிப்பால் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஸாம்பிக்கின் மத்தியை கடந்த வியாழக்கிழமை தாக்கியிருந்த இடாய், பின்னர் சிம்பாப்வேயில் உடனடி வெள்ளங்களையும் வேகமான காற்றுக்களையும் ஏற்படுத்தி, வீதிகளையும், வீடுகளையும் அடித்துச் சென்றிருந்தது.

இதேவேளை, தொடர்பாடல்கள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவை, செம்பிறை சமூகங்களின் சர்வதேச சம்மேளனத்தின் ஜேமி லீசுயர் தெரிவித்த நிலையில், மேலும் கடும்மழை எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், முழுமையான அளவு அழிவு தெரியவரும்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என குறித்த சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சிம்பாப்வேயில் தொடர் மழையினாலும், மணிக்கு 170 கிலோமீற்றர் வேகத்திலான காற்றினாலும் வீதிகள், வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், மின்சாரம், தொடர்பாடல் துண்டிக்கப்பட்ட நிலையில், சிமனிமனி மாவட்டம், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மாவட்டத்திலுள்ள மக்களை அடைய மீட்புப் பணியாளர்கள் சிரமப்படுகின்றநிலையில், கற்கள் வீழ்ந்ததாலும் நிலச்சரிவாலும் மழையாலும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டநிலையில், இங்குள்ள பலர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மலையிலேயே உறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் அவசரகாலநிலையை சிம்பாப்வே அரசாங்கம் பிறப்பித்துள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .