2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘இட்லிப்பைக் காப்பாற்றுங்கள்’

Editorial   / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில், போராளிகளால் கட்டுப்படுத்தப்படும் இட்லிப் பிராந்தியத்தில், புதிதாக மனிதாபிமானப் பேரழிவொன்று இடம்பெறுவதைத் தடுக்குமாறு, உலக நாடுகளிடம், சிரியாவுக்கான ஐக்கிய நாடுகளின் தூதுவர் ஸ்டஃபான் டி மிஸ்துரா வேண்டுகோள் விடுத்துள்ளார். உதவி நிதியளிப்புகள் தொடர்ந்தும் குறைவடைந்து வருகின்றன என்ற எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையிலேயே, ஐ.நா அதிகாரியின் இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற கொடையாளர்களின் மாநாடு ஒன்றில் கருத்துத் தெரிவித்த மிஸ்துரா, சிரிய அரசாங்கத்தின் பதிலடியின் அடுத்த இலக்காக, இட்லிப்பே காணப்பட அதிக வாய்ப்புகளுள்ளன எனத் தெரிவித்த அவர், அலெப்போவுக்கும் கிழக்கு கூட்டாவுக்கும் நடந்த அதே நிலைமை, இட்லிப்புக்கு ஏற்படும் வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டார்.

ரஷ்யாவால் ஆதரவளிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை, 2016ஆம் ஆண்டில் அலெப்போ மீது மேற்கொண்டிருந்த சிரியா, அப்பகுதியைக் கைப்பற்றியிருந்தது. இவ்வாண்டின் ஆரம்பத்தில், கிழக்கு கூட்டா மீது நடவடிக்கையை மேற்கொண்ட சிரியா, அப்பகுதியை, இம்மாத ஆரம்பத்தில் கைப்பற்றியது. இரண்டு நடவடிக்கைகளின் போதும், பொதுமக்களுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டதோடு, போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறிப்பாக, கிழக்கு கூட்டாவின் டூமா மீது, அண்மையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனத் தாக்குதல், சர்வதேச எதிர்ப்பையும் இராணுவத் தாக்குதல்களையும் சந்தித்திருந்தது.

“இட்லிப்பிலுள்ள மனிதாபிமான நிலைமை தொடர்பாக, நாங்கள் கவனம் கொண்டிருந்தோம், கொண்டிருக்கிறோம். ஏனெனில், இட்லிப் என்பது, பெரியளவிலான புதிய சவால். 2.5 மில்லியன் மக்கள் [அங்கு வாழ்கின்றனர்]” என்று அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு கூட்டாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை, அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. ஆனால், அங்கு 4 இலட்சம் பேரே வாழ்ந்து வந்தனர் என்ற அடிப்படையில், அதை விட 6 மடங்குக்கும் அதிக சனத்தொகையைக் கொண்ட இட்லிப்பில், பாதிப்புகள் அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .