2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இந்தியாவின் உண்மையான நண்பன்’

Editorial   / 2017 ஜூன் 27 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, நேற்று  சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். உலகின் முக்கியமான இரண்டு நாடுகளுக்குமிடையிலான இந்தச் சந்திப்பு, அதிக கவனத்தை ஈர்த்திருந்தது.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், “எனது பிரசாரக் காலத்தின் போது, நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், உண்மையான நண்பனொருவனை, வெள்ளை மாளிகையில் இந்தியா கொண்டிருக்கும் என்று கூறினேன். தற்போது, அதைத் தான் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் - உண்மையான ஒரு நண்பன்” என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு, பகிரப்படும் விழுமியங்களின்பால் கட்டியெழுப்பப்பட்டது என்று தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக உரையாடப்பட்டதாகத் தெரிவித்தார். அத்தோடு, இரு நாடுகளுக்குமிடையிலான உறவு, முன்னெப்போதும் இல்லாதவாறு, பலமானதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இரண்டு தலைவர்களும், சமூக ஊடகத் தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதில் பெயர்போனவர்கள் என்ற நிலையில், அதையும் நகைச்சுவையாக, ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டார். “சமூக ஊடகத் தளங்களில், பிரதமர் மோடியும் நானும், உலகத் தலைவர்கள் என்பதை ஊடகங்கள், அமெரிக்க மக்கள், இந்திய மக்கள் ஆகியோருக்கு, நான் பெருமையாக அறிவிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

பாதுகாப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “ஐ.அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு இணைப்பு என்பது மிகவும் முக்கியமானது. எங்கள் இரு தேசங்களும், பயங்கரவாதத்தின் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளன. பயங்கரவாத அமைப்புகளையும் அவற்றை வழிநடத்தும் அடிப்படைவாதக் கொள்கைகளையும் அழைப்பதற்கு, நாங்கள் உறுதியுடன் உள்ளோம். தீவிர இஸ்லாமியப் பயங்கரவாதத்தை நாம் தோற்கடிப்போம்” என்று தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு, மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தார்.

பலமான, செழிப்பான, வெற்றிகரமான அமெரிக்கா தொடர்பிலேயே, இந்தியாவின் நலன்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் அபிவிருத்தியும் சர்வதேச அரங்கில் அதன் வளர்ந்துவரும் பங்கும், ஐ.அமெரிக்காவின் நலன் சார்ந்தது என்று குறிப்பிட்டார்.

பயங்கரவாதம் தொடர்பில், புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறுவதை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், சேர்ந்தியங்குவதை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னர், பாதுகாப்புச் செயலாளரையும் இராஜாங்கச் செயலாளரையும், பிரதமர் மோடி சந்தித்தார். பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், காஷ்மிரின் பிரிவினைவாதக் குழுவான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் சிரேஷ்ட தலைவரான சையட் சலாஹுதீனை, பூகோள பயங்கரவாதியாக வகைப்படுத்துவதாக, இராஜாங்கத் திணைக்களம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு, இந்தியாவைப் பொறுத்தவரை, இராஜதந்திர ரீதியாகக் கிடைத்த முக்கியமான வெற்றியெனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .