2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இந்தியாவிலிருந்து சென்ற 31 றோகிஞ்சாக்களுக்கு பங்களாதேஷில் அனுமதி மறுப்பு

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்குள் புக முயன்ற, றோகிஞ்சா முஸ்லிம்கள் 31 பேருக்கு, பங்களாதேஷ் அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்ததால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் அவர்கள் சிக்கியுள்ளனர் என, பங்களாதேஷ் அதிகாரிகள் நேற்று (21) தெரிவித்தனர். றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைகளை இந்தியா அதிகரித்துள்ள நிலையிலேயே, இவர்கள் இவ்வாறு தப்பியோட முயன்றுள்ளனர்.

எல்லைப் பகுதியில் சிக்கியுள்ள றோகிஞ்சாக்களில், பெண்களும் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர் எனவும், இந்தியாவின் ஜம்மு - காஷ்மிர் மாநிலத்தில் வசித்து வந்தனர் எனவும், பங்களாதேஷ் எல்லைக் காவற்படையினர் தெரிவித்தனர். இவ்வாறு தப்பிச்செல்ல முயன்ற அகதிகள் சிலரிடம், ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவராண்மையால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பதைக் கண்டதாகவும், அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு சிக்கியுள்ள 31 பேரும், கடந்த வெள்ளிக்கிழமை (18) முதல் இவ்வாறு சிக்கியுள்ளனர் எனத் தெரிவித்த, அப்பகுதிக்கான பங்களாதேஷ் எல்லைக் காவற்படைத் தளபதியான கோலம் கபீர், “எல்லை தாண்டி அவர்கள் வந்துகொண்டிருந்ததால், அவர்களை நாம் தடுத்தோம்” என்று தெரிவித்தார்.

இந்த 31 பேர் தொடர்பாக என்ன முடிவை எடுப்பது என்பது தொடர்பில், இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில், இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன எனத் தெரிவித்த பங்களாதேஷ் தரப்பு, அவற்றில் வெற்றி கிடைக்கவில்லை என்று தெரிவித்தது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், 40,000க்கும் மேற்பட்ட றோகிஞ்சா முஸ்லிம்கள் காணப்படுகின்றனர் எனக் கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மத்திய அரசாங்கம், அவர்களைச் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் எனக் கருதுவதோடு, தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்றும் குறிப்பிடுகிறது. அத்தோடு, அவர்களை அடையாளங்கண்டு, வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .