2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரட்டைக் கார்க்குண்டுவெடிப்பில் 33 பேர் பலி

Editorial   / 2018 ஜனவரி 25 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவின் கிழக்குப் பகுதி நகரான பென்காசியில் மேற்கொள்ளப்பட்ட, இரட்டைக் கார்க்குண்டுவெடிப்பின் காரணமாக, குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டதோடு, சுமார் 50 பேர் காயமடைந்தனர். நேற்று முன்தினம் கொல்லப்பட்டவர்களில், பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட நபர்களும் பொதுமக்களும் உள்ளடங்குகின்றனர் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

லிபியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரான பென்காசி, அண்மைக்காலத்தில் ஓரளவுக்கு அமைதியான நிலைக்கு மாறியிருந்த நிலையிலேயே, இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில், 2014ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டின் இறுதிப் பகுதி வரை, தொடர்ச்சியான மோதல்களும் குண்டுவெடிப்புகளும் இடம்பெற்று வந்தன.

இந்தக் குண்டுகளில் முதலாவது குண்டு, பென்காசியின் மத்திய பகுதி மாவட்டமான அல் சல்மானியிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியே வெடித்தது. மாலை நேரத் தொழுகை முடிந்து வெளியேறிக் கொண்டிருந்தோர் இதில் சிக்கினர்.

அந்த இடத்துக்கு, பாதுகாப்புப் பிரிவினரும் சுகாதாரத் துறையினரும் வந்த பின்னர், முதலாவது குண்டு வெடித்து 10 - 15 நிமிடங்களில், இரண்டாவதும் சக்திவாய்ந்ததுமான குண்டு வெடித்தது. அம்பியூலன்ஸ் ஒன்றை அக்குண்டு தாக்க, அக்குண்டுவெடிப்பிலேயே அதிகமானோர் பலியாகினர்.

கொல்லப்பட்டவர்களில், கிழக்கு லிபிய பாதுகாப்புப் படைகளின் பொதுக் கட்டளைப் பிரிவின் புலனாய்வு மற்றும் கைது செய்யும் பிரிவைச் சேர்ந்த அஹ்மட் அல்-பெய்ட்டோரியும் உள்ளடங்குகிறார். அதேபோல், சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியான மஹ்டி அல்-ஃபெல்லா, காயமடைந்தவர்களுள் உள்ளடங்குகிறார்.

பென்காசி நகரம், பாரிய தாக்குதல்களுக்காக அறியப்பட்ட ஒரு நகரமாகும். அங்கு காணப்பட்ட ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, அப்போது இராஜாங்கச் செயலாளராக இருந்த ஹிலாரி கிளின்டன் மீது, பல ஆண்டுகளாக அரசியல் அழுத்தம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .