2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம்: பிரதிப் பிரதமரின் ஆசனமும் பறிபோகும்?

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான், இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனது நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி குறித்துக் கேள்விகள் காணப்படுவதாக, அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமர் பார்னபி ஜொய்ஸ் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பாகக் கேள்விகள் எழுந்துள்ளன.

அவுஸ்திரேலியச் சட்டத்தின் படி, இரட்டைப் பிரஜாவுரிமை அல்லது பல்-பிரஜாவுரிமையைக் கொண்டிருப்பவர்கள், நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகுவதற்கு முன்னர், தங்களது ஏனைய பிரஜாவுரிமைகளை இரத்துச் செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் இருப்பவர்களின் பதவி, இல்லாது செய்யப்படும்.

நேற்று முன்தினம் இரவு, அறிக்கையொன்றை வெளியிட்ட நியூசிலாந்து அரசாங்கம், ஜொய்ஸின் தந்தை மூலமாக, ஜொய்ஸுக்கு, நியூசிலாந்தின் பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டதாக உறுதிப்படத்தியது. இதைத் தொடர்ந்தே, இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.

தனக்கு இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பதாக இப்போதே தெரிந்துகொண்டதாகத் தெரிவித்த அவர், இந்தத் தகவலைப் பெற்றமை தொடர்பில், அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஜொய்ஸின் தந்தை, நியூசிலாந்தில் பிறந்திருற்நத நிலையில், அவர் பின்னர் அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்திருந்தார். தந்தை மூலமாகவே, ஜொய்ஸுக்கு, நியூசிலாந்துப் பிரஜாவுரிமை கிடைத்துள்ளது.

எனினும், இந்தத் தகவல் கிடைத்த பின்னரும், பதவியிலிருந்து விலகப் போவதில்லை என, ஜொய்ஸ் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்குக் காணப்படுவதாக, அவர் இதன்போது குறிப்பிட்டார்.

அரசாங்கத்துக்கு, வெறுமனே ஓர் ஆசனம் மூலமாகவே பெரும்பான்மை காணப்படும் நிலையில், ஜொய்ஸின் பதவி நீக்கமென்பது, குறுகிய காலத்தில், அரசாங்கத்துக்குத் தலையிடியை வழங்கக்கூடும்.

எனினும், இதற்கு மத்தியிலும், அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்து உறுதியுடன் இருப்பதாக, பிரதமர் மல்கொம் டேர்ண்புல் தெரிவித்துள்ளார். ஜொய்ஸ் தாக்கல் செய்துள்ள வழக்கில், அவருக்குத் தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும், பதவியிலிருந்து ஜொய்ஸ் விலக வேண்டுமென்ற கோரிக்கைகள், தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .