2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இரண்டு மாதங்கள் கோருகிறார் ஜனாதிபதி

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பெய்னின் கட்டலோனியப் பிராந்தியம், ஸ்பெய்னிலிருந்து சுதந்திரத்தைப் பிரகடனம் செய்துள்ளதா, இல்லையா என்பதை அறிவிப்பதற்கான காலக்கெடு நிறைவடைவதற்கு முன்னர், ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ராஜோய்க்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ள கட்டலோனியத் தலைவர் கார்லெஸ் புய்ன்டெமொன்ட், இரண்டு மாதங்கள் கால அவகாசம் கோரியுள்ளார். 

ஸ்பெய்ன் மத்திய அரசாங்கத்தால் கோரப்பட்ட, “ஆம் அல்லது இல்லை” என்ற நேரடியான பதிலை வழங்கத் தவறிய அவர், பிரதமரைச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். 

ஒக்டோபர் 1ஆம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், பிரிந்து செல்வதற்கு ஆதரவாக, 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டலோனிய மக்கள் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கத்துக்கும் கட்டலோனிய பிராந்திய அரசாங்கத்துக்கும் இடையில், முரண்பாடு ஏற்பட்டது. 

இதில், கடந்த வாரம் உரையாற்றிய கட்டலோனியத் தலைவர் கார்லெஸ், சுதந்திரப் பிரகடனம் செய்தாரா, இல்லையா என்பதே, முக்கியமான புள்ளியாகக் காணப்பட்டது. 

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டலன் மக்கள், சுதந்திரத்தைப் பிரகடனம் செய்வதற்கான ஜனநாயக ஆணையை, பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வழங்கினர். நடந்தவை எல்லாவற்றையும் தாண்டி, பேச்சுவார்த்தைக்கான எங்களது முன்மொழிவு, உண்மையானது” என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையிலேயே, இதுகுறித்து, ஸ்பெய்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், மத்திய அரசாங்கத்தின் பிரதமரை, நேருக்கு நேர் சந்திக்க விரும்புவதாகவும், ஜனாதிபதி கார்லெஸ் குறிப்பிட்டுள்ளார். 

அவரது இக்கடிதம், மக்களால் வழங்கப்பட்ட ஆணை தொடர்பாகவும் தங்களுடைய நோக்கங்கள் பற்றியும் குறிப்பிட்டாலும், கடந்த நாடாளுமன்ற அமர்வில், சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தாரா, இல்லையா என்ற விடயத்தை, ஜனாதிபதி கார்லெஸ் வெளிப்படுத்தவில்லை. 

ஏற்கெனவே, “ஆம் அல்லது இல்லை” என்பதில் தெளிவான பதிலை வழங்க மறுத்தால், “ஆம்” என்று கருத்திற்கொள்ளப்பட்டு, கட்டலோனியாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றப் போவதாக, ஸ்பெய்ன் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X