2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இறுதிக் கட்டத்திலும் போராடுகிறது ஐ.எஸ்.ஐ.எஸ்

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோல்வியை எதிர்கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதியின் இறுதிப் பகுதிக்குள் சிரியாவில் சிக்கியுள்ள போதிலும், தமது எதிர்ப்பை நேற்று (18) வெளிப்படுத்தியது. இதற்கு மத்தியில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அமைச்சர்கள் நேற்றுச் சந்தித்து ஆராய்ந்தனர்.

சிரிய - ஈராக் எல்லைப் பகுதியிலேயே, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் இறுதிக் கட்டுப்பாட்டுப் பகுதி காணப்படுகிறது. அவர்கள் இப்போது, அரைச் சதுர கிலோமீற்றருக்கும் குறைவான பகுதிக்குள் அடைபட்டுள்ளனர்.

ஆனால், அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு அவர்கள் தடுத்துள்ளனர் என, ஐ.அமெரிக்காவால் ஆதரவளிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள் தெரிவித்தது. பொதுமக்களை மனிதக் கேடயங்களாக அக்குழு பயன்படுத்துகிறது என, முன்னரே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், சுமார் 2,000 பொதுமக்கள் சிக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவின் தோல்வி உறுதியாகியுள்ள நிலையில், அக்குழுவைச் சேர்ந்த வெளிநாட்டு ஆயுததாரிகளை, ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்ததைத் தொடர்ந்து, அது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவோடு இணைந்து போரிட்டவர்கள் என, நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களை, சிரிய ஜனநாயகப் படைகள் கைதுசெய்துள்ளன. அவர்களுள் ஐ.இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே, 800க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளை, ஐரோப்பிய நாடுகள் பொறுப்பேற்று, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இல்லாவிடில், அவ்வாயுததாரிகளை விடுவிக்க வேண்டியேற்படுமென அவர் எச்சரித்திருந்தார்.

இதைத் தொடர்ந்தே, ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்கள் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினர். ஆனால், அச்சந்திப்பில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து இதுவரை தெரியவரவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X