2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இஸ்லாமிய ஜிஹாத் தளபதியை காஸாவில் கொன்றது இஸ்ரேல்

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனத்தின் காஸாவில் அரிதான இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலொன்றாக, ஈரானால் ஆதரவளிக்கப்படும் பலஸ்தீன ஆயுதக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத்தின் தளபதி பஹா அபு அல்-அத்தாவை இன்று இஸ்ரேல் கொன்றுள்ளது.

இந்நிலையில், பதிலடியாக டெல் அவிவ் உள்ளடங்கலாக இஸ்ரேலிய நகரங்கள் மீது ஆயுததாரிகள் றொக்கெட்டுகளை ஏவியுள்ளனர்.

இதேவேளை, சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸிலுள்ள இஸ்லாமிய ஜிஹாத் அரசியல் தலைவரான அக்ரம் அல்-அஜீரியின் வீட்டை இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலொன்று இலக்கு வைத்ததில், அவரது மகனொருவர் உள்ளடங்கலாக இரண்டு பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் மற்றும் மத்திய இஸ்ரேலில் பாடசாலைகளை மூட உத்தரவிட்டுள்ள இஸ்ரேலின் உள்நாட்டு முன்னரங்குக் கட்டளை, பொதுமக்களை வீடுகளுக்குள் இருக்குமாறும், முக்கியமானது தவிர பணிக்குச் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்திய நிலையில், பொதுப் புகலிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சில றொக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஹா அபு அல்-அத்தா தொடர்ச்சியான எல்லை கடந்த தாக்குதல்களை நடத்தியதாகவும், மேலும் பலவற்றை திட்டமிட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காஸா நகரத்தின் ஷெஜையா மாவட்டத்திலுள்ள கட்டடமொன்றை நேற்று அதிகாலையில் சிதறடித்த குண்டு வெடிப்பில் பஹா அபு அல்-அத்தாவின் மனைவியும் கொல்லப்பட்டதாக இஸ்லாமிய ஜிஹாத் தெரிவித்துள்ளது. இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X