2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஈராக்: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்தது

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கின் தலைநகர் பக்தாத்திலுள்ள பிரதான ஆர்ப்பாட்ட முகாமான தஹ்ரிர் சதுக்கத்துக்கு அருகே, அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரிகள் இலக்கு வைத்த தாக்குதல்களையடுத்து உயிரிழந்தோரின் எண்ணிக்கையை 25ஆக இன்று ஈராக்கிய அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.

இதேவேளை, தஹ்ரிர் சதுக்கத்துக்கு அருகே கடந்த வெள்ளிக்கிழமையிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம், கத்திக் குத்தில் 130க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பிக்-அப் ட்ரக்குகளில் கடந்த வெள்ளிக்கிழமையிரவு இருந்த துப்பாக்கிதாரிகள், வாரக் கணக்காக அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டிருந்த அல்-சினாக் பாலத்துக்கருகிலுள்ள பாரிய கட்டடமொன்றைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கட்டடத்திலிருந்து வலிந்து ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குதலாளிகள் வெளியேற்றியதாகவும், கைகலப்பையடுத்து துப்பாக்கிப் பிரயோகச் சத்தங்கள் கேட்டுள்ளன.

இந்நிலையில், கட்டடமானது அடையாளந்தெரியாத நபர்களால் எரியூட்டப்பட்டதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலில், 22 ஆர்ப்பாட்டக்காரர்களும், மூன்று பொலிஸ்காரரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகளுடன் அரசாங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவதாக சில ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுவதுடன், தாக்குதல்கள் இடம்பெற்ற சமயம் மின்வெட்டு இடம்பெற்றதை சுட்டிக் காட்டுகின்றனர்.

இதேவேளை, தென் ஈராக்கிய நகரமான நஜாஃப்பிலுள்ள ஷியா தலைவர் முக்டாடா அல்-சதாரின் வீட்டை ஆயுதந்தரித்த ட்ரோனொன்று இலக்கு வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அல்-சதாரின் ஆதரவாளர்கள் பக்தாத்தில் தரையிறக்கப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே குறித்த தாக்குதல் இடம்பெற்றதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X