2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஈரானில் ஆட்சி மாற்றத்துக்கு ஐ.அமெரிக்கா முயற்சி’

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்கா முயன்று வருகிறது என, ஈரான் ஜனாதிபதி ஹஸன் றௌஹானி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு, தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய ஜனாதிபதி றௌஹானி, தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பாக, மக்களுக்குக் குறிப்பிட்டார்.

ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்குமிடையில் இடையில், ஈரானின் அணுவாயுதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து, ஐ.அமெரிக்கா விலகும் முடிவை, அவர் எடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, ஈரான் மீதான புதிய தடைகளையும் அவர் விதித்துள்ளார்.

இந்நிலையில் உரையாற்றிய ஜனாதிபதி றௌஹானி, “கடந்த 40 ஆண்டுகளில், ஈரான் மீதும் ஈரானியர்கள் மீதும் இஸ்லாமியக் குடியரசு மீதும், இந்தளவுக்கு அதிகமான கேடு இழைக்கும் ஐ.அமெரிக்க அரசாங்கம் இருந்ததில்லை” எனக் குறிப்பிட்டார்.

கடந்த கால ஐ.அமெரிக்க அரசாங்கங்களில், கடும்போக்கு நிலைப்பாட்டுடனான ஒருவர் இருப்பார் எனவும், ஏனைய அனைவரும், மிதவாதிகளாக இருப்பர் எனவும் தெரிவித்த அவர், தற்போது, மிகவும் மோசமானவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

உளவியல், பொருளாதார ரீதியான போர் வழிமுறையைப் பயன்படுத்தி, நாட்டின் அரசாங்கத்தின் சட்டபூர்வத்தன்மையைக் கேள்விக்கு உட்படுத்துகின்றனர் என, ஐ.அமெரிக்க நிர்வாகத்தினர் மீது, அவர் குற்றஞ்சாட்டினார். சட்டபூர்வத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதன் மூலமே, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென அவர் குறிப்பிட்டார்.

இவ்வுரை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஐ.அமெரிக்க இராஜாங்கச் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது, ஐ.அமெரிக்க நிர்வாகத்தின் நோக்கம் கிடையாது எனக் குறிப்பிட்டார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த, ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் றூடி ஜூலியானி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது நோக்கமெனக் குறிப்பிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .