2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஈரான் அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்கா விலகுகிறது

Editorial   / 2018 மே 10 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் அணுவாயுத வல்லமையைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்நாட்டுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்கா விலகுகிறது என, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அவ்வொப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்கா விலகுமா, இல்லையா என, தொடர்ச்சியான கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இலங்கை நேரப்படி நேற்று (09) அதிகாலை, இவ்வறிவிப்பை ஜனாதிபதி விடுத்தார்.

ஐ.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில் கைச்சாத்திடப்பட்ட இவ்வொப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக, தனது பிரசாரக் காலத்திலிருந்தே கூறிவந்த ட்ரம்ப், பதவியேற்று 15 மாதங்களின் பின்னர், அம்முடிவை அறிவித்தார்.

2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இவ்வொப்பந்தத்தை, “படுமோசமானது” எனவும், ஐ.அமெரிக்காவுக்கு “அவமானகரமானது” எனவும் வர்ணித்த அவர், ஈரானின் அணுவாயுத முயற்சிக்கு, எவ்விதத்திலும் இது முட்டுக்கட்டை போடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஈரான் தொடர்பாக, “புதியதும் நிலைக்கக்கூடியதுமான ஒப்பந்தம் ஒன்று” தேவைப்படுகிறது எனக் குறிப்பிட்ட அவர், அவ்வொப்பந்தம் மூலமாக, ஈரானின் அணுவாயுத முயற்சிகள் மாத்திரமன்றி, அதன் ஏவுகணைத் திட்டங்கள், மத்திய கிழக்கிலுள்ள ஆயுதக்குழுக்களுக்கான ஆதரவு ஆகியவை தொடர்பாகவும் குறிப்பிடப்பட வேண்டுமென்றார்.

தற்போதுள்ள ஒப்பந்தத்தின்படி, ஈரானின் அணுக்குண்டைத் தடுத்து நிறுத்த முடியாது எனத் தெரிவித்த அவர், “அமெரிக்க நகரங்கள், அழிக்கப்படுமென அச்சுறுத்தப்படுவதையும், ‘அமெரிக்காவுக்கு மரணம்’ எனச் சத்தமிடுகின்ற அரசாங்கம், பூமியிலுள்ள மிகவும் பேரழிவு தரக்கூடிய ஆயுதங்களை அடைவதற்கும், நாம் அனுமதிக்க மாட்டோம்” என்றும் குறிப்பிட்டார்.

ஈரான் ஒப்பந்தத்திலிருந்து ஐ.அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவ்வொப்பந்தம் காரணமாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் நீக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை மீள அமுல்படுத்தும் ஆவணத்திலும், ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

அத்தோடு அவரது உரையில், ஈரானின் தற்போதைய அரசாங்கத்தை, “சர்வாதிகாரம்” என வர்ணித்த ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மக்களுக்கு, அதைவிடச் சிறந்த ஆட்சி கிடைக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.

ஈரான் ஒப்பந்தத்துக்கு, ஈரானின் கடும்போக்குவாதப் பிரிவினரும் எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்ற நிலையில், ஆட்சி தொடர்பான அவரது விமர்சனம், ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐ.அமெரிக்கா முயல்கிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரானின் கடும்போக்குவாதப் பிரிவினருக்கு அதிகமான பலத்தை வழங்குமெனக் கருதப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .