2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஈரான் தொடர்பில் ஐ.அமெரிக்கா கவலை

Editorial   / 2018 மே 01 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் நடவடிக்கைகள் தொடர்பில், ஐக்கிய அமெரிக்க, ஆழமாகக் கவலையடைந்துள்ளது என, ஐ.அமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ குறிப்பிட்டுள்ளார். இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, நேற்று முன்தினம் (29) சந்தித்த பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மத்திய கிழக்குக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பொம்பயோ, சவூதி அரேபிய மன்னர் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்திருந்தார்.

இந்நிலையில், டெல் அவிவ்வில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த பொம்பயோ, “இஸ்‌ரேல் மீதும் பிராந்தியம் மீதும், ஈரான் முன்னெடுக்கும் ஆபத்தான அச்சுறுத்தல்கள் தொடர்பில், நாம் தொடர்ந்தும் ஆழமாகக் கவலையடைந்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

ஈரானின் நடவடிக்கைகளை, “ஸ்திரத்தன்மையைக் குழப்பும் நடவடிக்கைகள்” என்றும் “பழிதூற்றும் நடவடிக்கைகள்” என்றும் வர்ணித்த பொம்பயோ, அந்நாட்டின் நடவடிக்கைகள் காரணமாக, மத்திய கிழக்கு மாத்திரமன்றி, முழு உலகும் பாதிக்கப்படும் ஆபத்தைக் கொண்டுள்ளதெனவும், அதை எதிர்கொள்வதற்கு, தோழமை நாடுகளுக்கிடையில் பலமான கூட்டுறவு காணப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டர்ர.

இஸ்‌ரேலுக்கான ஐ.அமெரிக்கத் தூதரகம், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர், டெல் அவிவ்விலிருந்து ஜெருசலேத்துக்கு, எதிர்வரும் மே 14ஆம் திகதி இடமாற்றப்படவுள்ள நிலையில், அந்த இடமாற்றம், “யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் மாற்றம்” என, பொம்பயோ குறிப்பிட்டார்.

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுத ஒப்பந்தத்தை, தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதா என்பது தொடர்பான முடிவை, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் எடுக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக, ஈரான் தொடர்பாக, ஐ.அமெரிக்க நிர்வாகத்திலிருந்து வரும் கருத்துகள், ஈரான் ஒப்பந்தத்தைக் கைவிடுவதற்கான சமிக்ஞைகள் என்றே கருதப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .