2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உரையாற்றுவதிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியால், அந்நாட்டுக் காங்கிரஸின் இரண்டு அவைகளுக்கும் ஆற்றப்படும் வருடாந்த உரையை ஒத்திவைப்பதற்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சம்மதித்துள்ளார். குறித்த உரையை நிகழ்த்துவதற்கான அனுமதியை வழங்கப் போவதில்லை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோஸி அறிவித்திருந்த நிலையிலேயே, ஜனாதிபதி ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.

“ஒன்றியத்தின் நிலை” என அழைக்கப்படும் இவ்வுரை, ஆண்டின் முதல் மாதத்தில் ஜனாதிபதியால் ஆற்றப்படும். புதிய ஆண்டில், என்னவாறான எதிர்ப்பார்ப்பை ஜனாதிபதி கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தும் உரையாக இது அமையும். இவ்வுரையை ஆற்றுவதற்கான பாரம்பரியம், பல தசாப்தங்களாக உள்ள போதிலும், குறித்த உரையை ஆற்றுவதற்கான அழைப்பை, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரே விடுக்க வேண்டும்.

அவ்வுரையை ஆற்றுவதற்கான அழைப்பை, சபாநாயகர் பெலோஸி முன்னர் விடுத்திருந்தாலும், அரசாங்க முடக்கம் தொடர்ந்துவரும் நிலையில், பாதுகாப்புப் பிரச்சினைகள் காணப்படுகின்றன எனத் தெரிவித்து, அவ்வுரையைப் பிற்போடுமாறு அல்லது எழுத்துமூலமாக, அவ்வுரையைச் சமர்ப்பிக்குமாறு பெலோஸி கோரியிருந்தார். இது தொடர்பான கலந்துரையாடல்கள் தொடர்ந்துவந்த நிலையில், இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் இரவில் அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், தேசத்தின் நிலை உரையை, ஏற்கெனவே திட்டமிடப்படி ஆற்றவுள்ளதாக, சபாநாயகர் பெலோஸிக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். உரையை நிகழ்த்துவதற்கான ஏற்பாட்டைச் சபாநாயகரே மேற்கொள்ள வேண்டுமென்ற நிலையில், குழப்பத்தை ஏற்படுத்துமென இது கருதப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை பதிலளித்த சபாநாயகர் பெலோஸி, அரசாங்க முடக்கம் நிறைவடையும் வரை, உரையை ஆற்றுவதற்குச் சம்மதிக்கப் போவதில்லை என, தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். குறித்த அறிவிப்பை அவர் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்திய நிலையில், பின்னடைவை ஜனாதிபதி ட்ரம்ப் எதிர்கொண்டார். சபாநாயகரைத் தாண்டி எதுவும் செய்ய முடியாதென்ற நிலை அவருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கை நேரப்படி நேற்றுக் காலை கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அவரின் கருத்தை ஏற்பதாகவும், அரசாங்க முடக்கம் நிகழும் வரை தனது உரையை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், இம்மாதம் முதலே, பிரதிநிதிகள் சபை, ஜனநாயகக் கட்சியின் கீழ் வந்திருந்தது. சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இம்முரண்பாடு, இருவருக்குமிடையிலான முரண்பாட்டின் முதற்சுற்றாகக் கருதப்பட்டது. தற்போது அதில், சபாநாயகர் பெலொஸி வெற்றிபெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .